லீ குவான் இயூ நரம்பு நோய்க்கு எதிராகப் போராடுகிறார்

நவீன சிங்கப்பூரைத் தோற்றுவித்தவர் என போற்றப்படும் லீ குவாம் இயூ நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோய் காரணமாக அவர் சீராக நடப்பதற்குச் சிரமப்படுகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் லீ-க்கு 88 வயதாகியது. அந்தத் தகவலை அவரது புதல்வி லீ வெய் லிங் தமது சண்டே டைம்ஸ் பத்தியில் வெளியிட்டுள்ளார். அவர் சிங்கப்பூர் தேசிய நரம்பியல் கழகத்தின் இயக்குநரும் ஆவார்.

Sensory peripheral neuropathy  என்னும் அந்த நோய் காரணமாக என் தந்தைக்கு கால்களிலிருந்து உணர்வுகள் முதுகுத் தண்டுக்குச்  செல்லவில்லை. அதனால் அவர் சீராக நடக்க இயலவில்லை. அதனை பல சிங்கப்பூரர்கள் நேரடியாகப் பார்த்துள்ளனர்,” என அவர் எழுதியுள்ளார்.

அவருடைய சகோதரர் லி ஷியன் லுங் அந்த நாட்டின் பிரதமர் ஆவார்.

லீ வெய் லிங், தமது பத்தியில் பல விஷயங்களைத் தொட்டு எழுதி வருகிறார். சிங்கப்பூரில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் அந்தப் பத்தியை அணுக்கமாக படித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் லீ குவான் இயூ, அமைச்சரவையிலிருந்து ஒய்வு பெற்றார்.  என்றாலும் வெளிநாடுகளுக்கு அவர் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1955ம் ஆண்டு தொடக்கம் அவர் எம்பி-யாக இருக்கிறார்.

“அவரது உடல் நிலை அன்றாடம் மாறுபடுகிறது. சில நாட்களில் அவர் சீராக நடக்கிறார். சில நாட்களில் தடுமாறி விடுகிறார். மத்திய நரம்பு மண்டலத்துக்கு வெளியில் உள்ள உணர்வு நரம்புகளில் மட்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.”

“அவருடைய மூளையும் தசைநார்களும் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கால்களிலிருந்து உணர்வுகள் கிடைக்காததால் சீராக நடப்பது அவருக்குச் சவாலாக இருக்கிறது,” என்றும் அவரது புதல்வி எழுதியுள்ளார்.

என்றாலும் தமக்கு ஏற்பட்டுள்ள நோயை எதிர்த்துப் போராட லீ உறுதி பூண்டுள்ளார். தமது வீட்டில் உள்ள டிரிட்மில் என்ற சாதனத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை தவறாமல் பயிற்சி செய்கிறார்.

“என் தந்தை சிங்கப்பூருக்கு தாம் இன்னும் பங்காற்ற முடியும் என எண்ணும் வரையில் அந்த நோயை எதிர்த்துப் போராடுவார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.,” என்றா அவர்.

“மருந்துகளுடனும் எளிய முன்னெச்சரிக்கையுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து தமது நாட்டுக்கும் உலகிற்கும் சேவையாற்ற முடியும் என நான் நினைக்கிறேன்.”

ஏஎப்பி