“ஆங்கில மொழித் திறன் மோசமாக இருப்பதால் பட்டதாரிகள் போட்டியிட முடியவில்லை”

மலேசிய பட்டதாரிகளுடைய ஆங்கில மொழித் தேர்ச்சி இன்னும் பிரச்னையாகவே இருந்து வருவதாக மலாயாப் பல்கலைக்கழக கல்வியாளர் ஒருவர் கூறுகிறார்.

உலக வேலை வாய்ப்புச் சந்தையில் திறமையாக போட்டியிட வேண்டுமானால் பட்டதாரிகள் ஆங்கிலத்தில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருப்பது அவசியம் என அந்தப் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வியல் துறையில் முது நிலை ஆய்வாளராகப் பணியாற்றும் மேரி எய்மி டோர்ஸ் கூறினார்.

“கல்விக்கான செலவுகளைப் பொறுத்த மட்டில் இந்த வட்டாரத்தில் உள்ள சில நாடுகளுக்கு இணையாக மலேசியாவும் செலவு செய்கிறது,” என அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகத் துறைக்கு 13.6 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. கல்வி, பயிற்சி, சுகாதாரம், வீடமைப்பும் சமூக மேம்பாடு ஆகியவை அந்தத் துறையில்  அடங்கும்.

பட்டதாரிகளுக்கான பயிற்சிக்கும் மறு பயிற்சிக்கும் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நாட்டில் தேர்ச்சி பெற்ற, அறிவாற்றல் மிக்க தொழிலாளர்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு அது அவசியமாகும்.

என்றாலும் மலேசியாவில் பட்டதாரிகளுடைய தரம் தொடர்ந்து ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

“மொழி நிச்சயம் ஒரு பிரச்னை ஆகும்.” எனக் குறிப்பிட்ட அவர், அண்மையில் கல்வித் துறையில் ‘மேம்பாடு காண்பதற்கான பாதை’ என்ற தலைப்பைக் கொண்ட உலக வங்கியின் வெளியீட்டை மேற்கோள் காட்டினார்.

உலகத் தரத்திலான ஆய்வுப் பல்கலைக்கழகமாக திகழ்வதற்கு என்ன தேவை என்பதைப் பற்றிய ஆய்வை அந்த அறிக்கை கொண்டுள்ளது.

அந்த ஆய்வு மலாயாப் பல்கலைக்கழகத்தையும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தையும் ஒப்பீடு செய்துள்ளது.  ‘சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் மலாயாப் பல்கலைக்கழகமும்: பொதுவான வேர்கள், வெவ்வேறான பாதைகள்’ என்னும் தலைப்பில் அந்த ஆய்வு அமைந்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு இணங்க சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் தன்னை மேம்படுத்திக் கொண்டது. அதனால் அனைத்துலக ரீதியில் போட்டியிடும் ஆற்றலை அது பெற்றது. அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் தொடர்ந்து போதானா மொழியாகவும் ஆய்வு மொழியாகவும் இருந்தது. அதே வேளையில் மலாயாப் பல்கலைக்கழகம் உள் நோக்கும் கொள்கையில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தேசிய மொழிக்கு சாதகமான சூழ்நிலையால் ஆங்கில மொழித் திறன் சரிந்தது என அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

பிலிப் அல்ட்பாஷ், ஜமில் சால்மி ஆகிய இரண்டு அறிஞர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அந்த வெளியீடு அமைந்துள்ளது. மலாயாப் பல்கலைக்கழகம் பெரும்பாலும் தேசிய மொழியில் பாடங்களைப் போதித்ததால் அதன் திட்டங்கள் அனைத்துலக மயமாவது கட்டுப்படுத்தப்பட்டது. கல்வியாளர்கள் மாணவர்கள் ஆகியோரது அனைத்துலக ஈடுபாடும் குறைந்தது.