முறையில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி முதலில் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த பொதுத்தேர்தலை தடுத்து நிறுத்துவோம் என்று பல அரசு சார்பற்ற அமைப்புகள் சூளுரைத்துள்ளன.
மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் தாங்கள் ஆளும் சக்திகளைக் கவிழ்ப்பதற்கு தயங்க மாட்டோம் என்று அரசாங்கத்திற்கு சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்) மற்றும் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎல்எம்) ஆகிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
“இம்முறை, மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதில் பங்கேற்பது மட்டுமல்லாமல் தூய மற்றும் நியாயமான ஜனநாயக தேர்தல் நடைமுறையை அடைவதற்கான மக்களின் உரிமையை நீண்டகாலமாக உறுதிப்படுத்தத் தவறிவிட்ட ஆட்சிமுறையை மாற்றுவதற்கான இயக்கத்தில் பங்கேற்கும் சாத்தியத்தை உதாசீனம் செய்ய வேண்டாம்”, என்று எஸ்எஎம்எம் தலைவர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் கூறினார்.
செகுபார்ட் என்று பிரபல்யமாகியுள்ள பாட்ருல் பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் 13 ஆவது பொதுத்தேர்தல் தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் பின்னர்தான் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நம்புங்கள், மக்கள் பொறுமை இழந்து வருகின்றனர். நாடு தேர்தல் நடைமுறையின் மீதான நம்பிக்கை இன்மையை எதிர்கொண்டுள்ளது. அது இப்போது மிக மோசமாக இருக்கிறது.
“தேர்தல் நடைமுறைக்கு நம்பத்தக்க மேம்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படுமானால், மக்களை தெருவில் இறக்குவோம் என்று உறுதியளிக்கிறோம்”, என்றாரவர்.
உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்த பெர்சே 2.0 பேரணியில் 50,000 க்கு மக்கள் பங்கேற்றதும், அப்பேரணியை நடக்கவிடாமல் செய்வதற்காக போலீசார் நடத்திய வன்செயல்களும், 1,700 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டதும், நஜிப் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதனைச் சீர்செய்வதற்காக தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று நஜிப் அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு சீற்றமடைந்துள்ள மக்களை சாந்தப்படுவதற்கான ஒரு கண்துடைப்பு வேலை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றத்தை கலைக்கும் இறுதி அதிகாரம் பிரதமரிடம் இருப்பதோடு நாடாளுமன்ற சிறப்புக்குழு அதன் பரிந்துரைகளை செய்வதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளது சுட்டிக் காட்டப்படுகிறது.
“அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க மோசடி”
அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் நஜிப் நாடாளுமன்றத்தை இம்மாதம் கலைக்கும் எண்ணம் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளன என்று பாட்ருல் கூறினார்.
“நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுமானால், அது நிச்சயமாக நாட்டின் வரலாற்றில் மிகத் தூய்மையற்ற தேர்தலாக இருக்கும்.
“மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தேர்தல் நடத்தப்படுமானால், அது ஆளும் ஆட்சிமுறையை நியாயப்படுத்துவதற்கானது என்ற தோற்றத்தை அளிக்கும்”, என்றாரவர்.
தற்போதைய தேர்தல் முறையில் காணப்படும் பலவீனங்களைக் கலைவதற்கு “கடுமையான சீர்திருத்த நடைமுறை” தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்திய அவர், மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் வெறும் “அழகுப்படுவதற்கான மாற்றங்கள்” என்றில்லாமல் இருப்பதை ஆளுங்கட்சி உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதனிடையே, எம்சிஎல்எம் தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் கூறியுள்ளதை மேற்கோள் காட்டி பாஸ் கட்சியின் இதழ் ஹராக்காடெய்லி எஸ்எஎம்எம்மின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
“டிசம்பர் 10 இல் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பிரதமர் நாடாளுமன்றத்தை நவம்பர் 11 இல் கலைப்பார் என்ற நம்பகத் தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
“இது உண்மையானால், அதிகாரத்தில், மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில், மோசடி மூலம் தொடர்ந்து இருப்பதற்காக அம்னோவும் பாரிசானும் எடுத்துள்ள நடவடிக்கையாக இதனை நாங்கள் கருதுகிறோம்”, என்று ஹேரிஸ் கூறினார்.