அரசாங்க உள்வட்டாரங்களிலிருந்து கிடைத்தத் தகவலின்படி பிரதமர் நஜிப் நவம்பர் 11 இல் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு டிசம்பர் 10 இல் பொதுத்தேர்தலை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளதாக நேற்று அரசு சார்பற்ற அமைப்புகளான சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்) மற்றும் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎல்எம்) ஆகிய இரண்டும் கூறின.
மேலும், தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி முதலில் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த பொதுத்தேர்தலை தடுத்து நிறுத்துவோம் என்றும் அந்த அமைப்புகள் சூளுரைத்துள்ளன.
மிகத் தூய்மையற்ற தேர்தலாக இருக்கும்
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக்குழு அதன் வேலையைச் செய்து முடிக்க 8 லிருந்து 12 மாதங்கள் வரையில் பிடிக்கலாம் என்பதால் அது மக்களை ஏமாற்றுவதற்கான வேலையாகும் என்று இன்று இரவு ரவாங்கில் நடந்த சிலாங்கூர் மாநில அரசு தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது கூறிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், “நாடாளுமன்ற சிறப்புக்குழு (PSC) ஒரு கண்துடைப்பு வேலை, மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்டது”, என்று மேலும் கூறினார்.
“நான் ஒன்றை திட்டவட்டமாக கூறுகிறேன்: தேர்தலுக்கு மக்கள் தயார்; நாங்கள் தயார். ஆனால், தேர்தல் நடந்தால், இராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரின் ஈடுபாட்டோடு அது மிகத் தூய்மையற்ற தேர்தலாக இருக்கும்.
“தேர்தல் நடைமுறைக்கு நம்பத்தக்க மேம்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படுமானால், மக்களை தெருப் போராட்டத்தில் இறக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் திட்டத்தை சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்) மற்றும் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎல்எம்) ஆகிய அமைப்புகளிடமே விட்டுவிடுகிறேன். அத்திட்டத்தை ஆதரிக்கிறேன்”, என்றார் சேவியர்.
அந்நியத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு ரிம1 மில்லியன் ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக் காட்டி, அவ்விசாரணை நிச்சயமாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.
பெர்சே 2.0 போராட்டம் தேர்தல் சீர்திருத்தத்தின் அவசியத்தை வெளிப்படுத்தியது. அதனை மக்கள் ஆதரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்த பின்னர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறிய செலயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், “இதனை மீறி தேர்தல் நடத்த முயற்சிக்கப்பட்டால், நான் அந்த இரு அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆலோசனையை ஆதரிக்கிறேன்”, என்றார்.
வந்தால் வரட்டும்
பொதுத்தேர்தல் நடத்துவதற்காக இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தாம் நினைக்கவில்லை என்றார் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா.
“அப்படி வந்தால், வரட்டும். பிஎன்னை நையப்புடைப்போம்”, என்றாரவர்.
சிலாங்கூர் சட்டமன்றம் விவாதிக்கும்
ரவாங் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் சட்டமன்றம் நவம்பர் 9 இல் நடைபெறும் அதன் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கும் என்றார்.
“நாங்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை ஆதரிக்க மாட்டோம்”, என்றாரவர்.