போலீஸ் 2011ம் ஆண்டுக்கான செக்சுவாலிட்டி மெர்தேகா நிகழ்வுகள் பற்றி வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனிடம் விசாரித்துள்ளது.
கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் நேற்று மாலை மணி 4.05 அளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தெனாகானித்தா அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு ஏறத்தாழ அரை மணி நேரத்துக்கு அம்பிகாவின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
நவம்பர் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த செக்சுவாலிட்டி மெர்தேகா நிகழ்வுகளை பெர்சே 2.0ன் தலைவருமான அம்பிகா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த அலுவலகத்தில் தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ், மரியா சின் அப்துல்லா, செக்சுவாலிட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பாங் கீ தெய்க்-கும் இருந்தார்கள்.
ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் புதல்வி மரினா மகாதீரும் அங்கு இருந்தார்.
“இந்த நாட்டில் நமக்கு வெட்கமே இல்லையா? ( திருநங்கை சமூகத்தை ஒடுக்குவதற்கு) தயவு செய்து அவர்களுக்கு சிறிதளவு அனுதாபம் காட்டுங்கள்,” என அம்பிகா, ஊடகங்களிடம் கூறினார்.
அந்த விவகாரம் மீது முக்கிய ஊடகங்கள் சரியான தகவல்களை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரினா அந்த நிகழ்வுகளை தொடக்கி வைத்தார்
இதனிடையே பாங், தமது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கு கடிதம் ஒன்றை ஒப்படைத்தார்.
“நாங்கள் ஐஜிபி-யைச் சந்தித்து எங்களுடைய நோக்கங்களைத் தெளிவுபடுத்தி ஊடகங்கள் சொல்வதைப் போல நாங்கள் எதனையும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.”
செக்சுவாலிட்டி மெர்தேகாவுக்கு ஆதரவு தெரிவித்த மரினா, அடிப்படை மனித உரிமைகளைத் தற்காப்பதே அந்த நிகழ்வின் நோக்கம் என்றார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அந்த நிகழ்வைத் தொடக்கி வைத்தேன். எந்தப் பிரச்னையும் இல்லை. ஒதுக்கப்பட்ட அந்த சமூகத்துக்கு அதனுடைய சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்வதே அதன் நோக்கமாகும்,” என அவர் சொன்னதாக பெர்னாமா குறிப்பிட்டது.
பல தரப்பட்ட பாலியல் நாட்டங்களையும் பால் அடையாளங்களையும் கொண்ட மக்களுடைய மனித உரிமைகளை கொண்டாடுவதற்காக செக்சுவாலிட்டி மெர்தேகா 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.