MCCBCHST-இன் கருத்து “தீவிரமானது”, முப்தி சாடல்

மலேசிய பொளத்தம், கிறிஸ்துவம்,இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனை மன்றம் (MCCBCHST), பள்ளிகளும் பொது இடங்களும் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்துநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைக் கண்டிக்கும் பல முஸ்லிம் என்ஜிஓ-க்களுடன் பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜெயாவும் சேர்ந்துகொண்டிருக்கிறார்.

அதை முஸ்லிம் விவகாரங்களில் தலையிடும் ஒரு‘’தீவிர நடவடிக்கை” என்று வருணித்த அவர், சில தரப்புகள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடும் என்று எச்சரித்தார். 

“பொது இடங்களில் பலி கொடுக்க வேண்டாம் என்று MCCBCHST அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருப்பது முஸ்லிம்களின் சமய நெறிமுறைகளில் தலையிடுவதாகும்.

“இது பிடிக்கவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.”

கடந்த சனிக்கிழமை, ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முதல் நாள் MCCBCHST விடுத்த அறிக்கை தொடர்பில் அவர் இப்படியொரு பதிலறிக்கை விடுத்துள்ளார். MCCBCHST பள்ளிநாள்களில் பல இன மாணவர்கள் முன்னிலையில் மாடுகள் வெட்டப்படுவது குறித்து தனது அறிக்கையில் கவலை தெரிவித்திருந்தது.

மாடுகள் வெட்டப்படுவதை பள்ளிசெல்லும் மாணவர்கள், குறிப்பாக மாடுகளைப் புனிதமாகக் கருதும் இந்து மாணவர்கள் பார்த்தால் மனம் புண்படுவார்களே என்பது புறக்கணிக்கப்படுவதாக மன்றம் குறிப்பிட்டிருந்தது.

மாடுகள் வழக்கமாக பள்ளிவாசல்களில்தான் வெட்டப்படும். ஆனால், கோலாலம்பூரில் இரண்டு பள்ளிகளில் மாடுகள் வெட்டத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.  

ஆனால், போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டதாக மலேசியாகினி அறியவருகிறது.

MCCBCHST-இன் அறிக்கையை முஸ்லிம் என்ஜிஓ-க்கள் பலவும் குறைகூறின.

“நாட்டில் ஏற்கனவே பல தீவிரவாத அமைப்புகள் உள்ளன. அவற்றின்  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம்”, என்று ஜுவாண்டா தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

MCCBCHST-இன் அறிக்கையை பிரதமர்துறை துணை அமைச்சர் மஷிடா இப்ராகிமும் கடுமையாக சாடியிருந்தார்.

இன்று மலாய் நாளேடான பெரித்தா ஹரியானில் வெளிவந்த செய்தியில், மன்றம் முஸ்லிம்களின் சமய நெறிமுறைகளையும் இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் என்பதையும் மதிக்கவில்லை என்று செனட்டர் குறிப்பிட்டிருந்தார்.

“இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காகவே இவ்விவகாரம்  கிளப்பிவிடப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். நீண்டகாலமாக நடந்துவரும் பலியிடுதல் என்னும் நெறிமுறை குறித்து இதுவரை எவரும் கேள்வி கேட்டதில்லை.

“பல்லின சமுதாயத்தில், முஸ்லிம்கள் மற்ற சமயத்தவரின் உரிமைகளை மதிப்பதுபோல் மற்ற சமயத்தவரும் முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். எல்லாத் தரப்பினரும் ஒருவர் மற்றவரை மதித்தும் புரிந்தும் நடந்துகொண்டால் இதுபோன்ற விவகாரம் எழுந்திருக்காது”, என்றாரவர்.