அம்னோ எம்பி தெங்கு ரசாலி ஹம்சாவைத் தலைவராகக் கொண்ட அங்காத்தான் அமானா மெர்டேகா அல்லது அமானா, தேர்தல் சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆதரிப்பதாக இன்று கூறியது. அண்மையில் பதிவு செய்யப்பட்ட அந்த என்ஜிஓ-வில் முன்னாள் பிஎன் தலைவர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்த என்ஜிஓ-வின் நிலைப்பாட்டை தெங்கு ரசாலி இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். தங்கள் கட்சிகளில் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் அதனால் அமானாவழியாக தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறுவதாகவும் அவர் சொன்னார்.
அரசாங்கம் பிஎஸ்சி-யை அமைத்ததை வரவேற்ற அவர், அது முன்வைக்கும் பரிந்துரைகள் அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் அமலாக்கப்பட வேண்டும் என்றார்.
அச்செய்தியாளர் கூட்டத்தில் முன்னாள் சுற்றுலா அமைச்சர் அப்துல் காடிர் ஷேய்க் பாட்சிரும் இருந்தார். அவர் அமானாவின் ஆறு துணைத் தலைவர்களில் ஒருவராவார்.
“குழுவின் பணிகள் முடிந்து அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுத்த பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
“இல்லையேல் அக்குழு அமைக்கப்பட்டதற்கே அர்த்தம் இருக்காது”, என்று அந்த முன்னாள் எம்பி கூறினார்.
“பிஎஸ்சி-இன் பணி முடியும் முன்னர் தேர்தல் நடத்தப்பட்டால் பின்னர் அக்குழு அமைக்கப்பட்டதே ஒரு விளையாட்டுக் காரியமாக, ஒரு நாடகமாகத்தான் கருதப்படும். அது நல்லதல்ல”, என்றாரவர்.