2 மில்லியன் ரிங்கிட் பெறும் துண்டுப் பிரசுர அடுக்குகள் வாங்கப்பட்டது மீது சுற்றுலா அமைச்சு விசாரணை

2007 மலேசிய வருகை ஆண்டுக்காக துண்டுப் பிரசுரங்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோக அடுக்குகள் கொள்முதல் செய்யப்பட்ட விசயத்தை சுற்றுலா அமைச்சு புலனாய்வு செய்கிறது.

அத்தகைய ஆயிரம் அடுக்குகள் மொத்தம் 1.95 மில்லியன் ரிங்கிட்டுக்கு அப்போது கொள்முதல் செய்யப்பட்டதாக 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 5ம் தேதி புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அது நவம்பர் 18க்குள் முழு அறிக்கையை தமக்குச் சமர்பிக்கும் என அந்த அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஒங் கொங் பெங் தெரிவித்தார்.

என்றாலும் வழங்கப்பட்ட 873 அடுக்குகளுக்கு 1.7 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே நிதி அமைச்சு  அங்கீகரித்ததாக அவர் விளக்கினார்.

நிதி அமைச்சு அங்கீகாரம் இல்லாமல் நேரடி பேச்சுக்கள் மூலம் ஆயிரம் அடுக்குகள் கொள்முதல் செய்யபட்டதாக அண்மையில் வெளியான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அந்த அடுக்குகள் சுற்றுலாத் துணுப் பிரசுரங்களுடன் முழுமையாக விநியோகம் செய்யப்பட்டதா என்பதை அந்த ஆய்வறிக்கை உறுதி செய்யவில்லை.

சுற்றுலா அமைச்சு 2009ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையில் மேற்கொண்ட விளம்பர நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட ஒங், விளம்பரங்களுக்கான இடங்களுக்கு நேரடியாக பதிவு செய்யப்பட்டதால் விளம்பர நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய 15 விழுக்காடு தரகுப் பணம் சேமிக்கப்பட்டதாக விளக்கினார். அந்த வகையில் 2009ம் ஆண்டு 19.93 மில்லியன் ரிங்கிட்டும் 2010ம் ஆண்டு 9.2 மில்லியன் ரிங்கிட்டும் மிச்சமடைந்தன.

“அந்த நடவடிக்கையின் விளைவாக சுற்றுலா மேம்பாட்டுவாரியம் 2009, 2010ம் ஆண்டுகளுக்கான தனது செலவுகளைத் திட்டமிட்டு சிறந்த நிதி நிர்வாகத்தை கடைப்பிடிக்க முடிந்தது. அதனால் பற்றாக்குறை கூடுவது கட்டுப்படுத்தப்பட்டது”, என்றார் அவர்.

பெர்னாமா