துணை அமைச்சர்: அரசியலமைப்பின் 48(6) பிரிவு ரத்துச் செய்யப்பட மாட்டாது

கூட்டரசு அரசியலமைப்பின் 48(6) பிரிவை ரத்துச் செய்ய அரசாங்கம் எண்ணவில்லை என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ யூய் கியோங் கூறுகிறார்.

பதவி துறக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவை உறுப்பினராக அவர் பதவி துறந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான தகுதியை இழப்பார் என அந்தப் பிரிவு கூறுகிறது.

அதில் இடைத் தேர்தல் சம்பந்தப்பட்டுள்ளதால் பணம், நேரம், ஆற்றல் ஆகியவை விரயமாவதைத் தவிர்க்க அந்த விதி முறை அவசியம் என அவர் சொன்னார்.

துணை அமைச்சர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவ்வாறு கூறினார். ஜனநாயக உணர்வின் அடிப்படையில் அரசாங்கம் அந்தப் பிரிவை ரத்துச் செய்யுமா என்று டிஏபி குளுகோர் உறுப்பினர் கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்கு அவர்  பதில் அளித்தார்.

அதே இடத்துக்கு பதவி துறந்த எம்பி-யின் மனைவி/கணவர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் போட்டியிடுவதையும் அது தடுப்பதாகவும் லியூ வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகள் விரும்புவது போல கட்டாயமாக திணிக்கப்படும் தேர்தல் ஜனநாயகக் கோட்பாடா என  பிஎன் பாசிர் சாலாக் உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கூடுதல் கேள்விக்குப் பதில் அளித்த லியூ, மக்களுக்கான தங்கள் கடமைகளையும் பொறுப்புக்களையும் உறுப்பினர்கள் நிறைவேற்றுவதையும் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பதைத் தடுப்பதையும்  கூட்டரசு அரசியலமைப்பின் 48(6) பிரிவு நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

-பெர்னாமா