வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், தூதரகங்களில் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும்

வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள தகுதி பெற்ற, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தாங்கள் வாழும் நாடுகளில்  உள்ள மலேசியத் தூதரகங்களில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் வாக்களிப்பதற்கான தங்களது உரிமைக்கு உத்தரவாதம் பெற முடியும் என வெளியுறவுத் துணை அமைச்சர் செனட்டர் ஏ கோகிலன் பிள்ளை கூறுகிறார்.

அந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் செயல்படும் தமது அமைச்சு, அனைத்து மலேசியத் தூதரகங்களிலும் வாக்காளர் பதிவு பாரங்கள் போதுமான அளவுக்கு இருப்பதை உறுதி செய்து வருவதாக அவர் இன்று மக்களவையில் மேலும் கூறினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், வாக்களிப்பதற்கான தங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்கு உலகம் முழுவதுமுள்ள மலேசியத் தூதரகங்கள் எந்த அளவுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளன என பிகேஆர் லெம்பா பந்தாய் உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் எழுப்பிய கேள்விக்கு கோகிலன் பிள்ளை பதில் அளித்தார்.

இதனிடையே வேட்பாளர் நியமனம் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக பிஎன் கினாபாத்தாங்கான் உறுப்பினர் பாங் மொக்தார் ராடின் தொடுத்த கேள்விக்குப் பதில் அளித்த போது கோகிலன் கூறினார்.

என்றாலும் அந்தப் பிரச்சாரம் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

பெர்னாமா