முன்னாள் பிஎன் தலைவர்கள்: எங்கள் குரலுக்கு இடமில்லை

பிஎன் என்ற பாரிசான் நேசனலின் உறுப்புக் கட்சிகளில் தங்களது குரலுக்கு ஜனநாயக ரீதியில் இடம் அளிக்கப்படுவதில்ல என பல முன்னாள் பிஎன் தலைவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். அதனால் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள அமானா எனப்படும் Angkatan Amanah Merdeka அமைப்பில் தாங்கள் இணைந்துள்ளதாக  அவர்கள் தெரிவித்தனர்.

நடப்பு அம்னோ தலைமைத்துவம் எதிர்ப்புக் குரல்களை இப்போது அனுமதிப்பதில்லை என அம்னோவைச் சேர்ந்த குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சாவும் முன்னாள் சுற்றுலா அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிரும் கூறியுள்ளனர்.

“நாங்கள் கட்சி மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால் நாங்கள் எங்கள் கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்க இன்னொரு வழியைத் தேர்வு செய்து கொண்டுள்ளோம். அந்தக் கட்சியில் எதிர்ப்புக் குரலுக்கு இடம் இல்லை,” என அப்துல் காதிர் சொன்னார்.

அரசுக்கு எதிராகவும் கட்சியின் நிலைக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்கு அம்னோவின் நான்காவது தலைவர் ஹுசேன் காலம் வரையில் இடமும் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்ததாக அப்துல் காதிர் சொன்னார்.

அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ரசாலி, “எனக்கு கட்சியில் இடமில்லை,” என்றார். அவர் அமானாவை தோற்றுவித்த தலைவரும் ஆவார்.

அந்த இரண்டு அம்னோ தலைவர்களும் எடுத்துக் காட்டுக்கு அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டங்களைச் சுட்டிக் காட்டினர்.

பேராளர்களும் அவர்களது சொற்பொழிவுகளும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் கட்சித் தலைமைத்துவத்தின் அங்கீகாரத்தை முதலில் பெற வேண்டியுள்ளதாக அவர்கள் இருவரும் கூறிக் கொண்டனர்.

“ஆகவே அடி நிலை உறுப்பினர்களுடைய கருத்துக்கள் செவிமடுக்கப்படுவது இல்லை,” என்றார் தெங்கு ரசாலி.

“ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நடத்த நாம் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் இனிப்பான விஷயங்களை மட்டுமே பேசுகிறோம். அதை விட அவற்றை முன் கூட்டியே எழுதி விடுவது நல்லது,” என அப்துல் காதிர் புன்னகையுடன் கூறினார். அவர் அமானாவின் ஆறு துணைத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இன்னொரு துணைத் தலைவரும் முன்னாள் மசீச தலைவருமான பாண்டான் எம்பி ஒங் தீ கியாட், தாம் பிஎன் எம்பி என்பதால் அரசு சாரா அமைப்பு ஒன்றில் சேருவதற்கான தமது உரிமை மறுக்கப்படவில்லை என கூறினார்.

அமானா சுயேச்சையான அரசு சாரா அமைப்பு என்று வலியுறுத்திய அவர்கள், மக்களுடைய கவலைகளை எடுத்துரைக்கும் குரல்களுக்கு, அவை நடப்பு நிர்வாகத்துக்கு எதிராக இருந்தாலும் இடம் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

அமானா அமைக்கப்படுவதற்கு சங்கப் பதிவதிகாரி அனுமதி கொடுத்துள்ளதை அறிவிக்கும் பொருட்டு கோலாலம்பூரில் ரசாலியின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிருபர்கள் சந்திப்பில்  அந்த மூவருடன் முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியமும்  கலந்து கொண்டிருந்தார்.