ரசாலி மீது தடை ஆணை ஏதுமில்லை என்கிறார் முஹைடின்

முன்னாள் அம்னோ உதவித் தலைவரும் குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார்.

“மாநில, தொகுதி நிலையில் எந்த அம்னோ தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது தனிநபர்களுக்கு எதிராகவோ எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

அம்னோவில் பேச்சுச் சுதந்திரம் இல்லை என ரசாலி இன்று காலை தெரிவித்துள்ளது குறித்து முஹைடின் கருத்துரைத்தார்.

எதிர்வரும் அம்னோ பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு தமக்கு இடம் அளிக்கப்படாதது குறித்து ரசாலி ஏமாற்றம் அடைந்திருந்தால் அந்த நிகழ்வில் பேசுவதற்கு பலருக்கு விருப்பம் இருப்பதைப் அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

“அனைவரும் பேச விரும்பினால் பொதுக் கூட்டம் ஒரு மாதத்திற்குள் கூட நிறைவடையாது. அதனால் நாங்கள் கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்படும் மாநிலப் பேராளர்களை பேச அனுமதிக்கிறோம்.”

கட்சி குறித்து யோசனைகள் அல்லது மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இருந்தால் ரசாலி அதனை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். அவர் பொதுக் கூட்டத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என முஹைடின் கூறினார்.

“நான் அன்றாடம் நாளேடுகளைப் படிக்கும் போது அம்னோ தலைவர்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கிறேன். அவர்களில் சிலர் அளவுக்கு அதிகமாகப் பேசுகின்றனர்.”

“அம்னோவில் ஜனநாயக முறை உயிருடன் இருக்கிறது,” என்றார் முஹைடின்.

“ஆகவே தாம் பேச முடியவில்லை என அவர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை.”

சமய பதற்றத்தை உருவாக்க வேண்டாம்

பொது இடங்களில் மாடுகள் வெட்டுவது போன்ற சமயச் சடங்குகள் நடத்தப்படக் கூடாது என அறிக்கை விடுத்துள்ள MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமய ஆலோசனை மன்றத்தை முஹைடின் சாடினார்.

“அத்தகைய கருத்துக்கள் தேவை இல்லை என நான் எண்ணுகிறேன். ஏனெனில் அது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கருத்துக்கள் முஸ்லிம்களுடைய உணர்வுகளையும் தொடுகின்றன,” என்றார் அவர்.

“அது போன்ற விஷயங்களை அவர்கள் மீண்டும் தொட மாட்டார்கள் என நான் நம்புகிறேன். அதுவும் அவ்வாறு கருத்துக் கூறுகின்றவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு அந்த விஷயம் புரியாது.”

பள்ளிகூடங்களில் மாடுகளை வெட்டுவதை நிறுத்துமாறு அதிகாரிகளை கடந்த வாரம் MCCBCHST கேட்டுக் கொண்டது. ஏனெனில் அது குறிப்பிட்ட சில சமூகங்களின் குறிப்பாக மாடுகளைப் புனிதமாகக் கருதுகின்ற இந்து சமயத்தைச் சார்ந்தவர்களுடைய உணர்வுகளை பாதிப்பதாக MCCBCHST குறிப்பிட்டது.

“இந்த நாட்டில் உள்ள இந்துக்கள் மாடுகளை வெட்டும் சடங்குகளை புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் பத்திரிக்கைகளில் பார்க்கின்றனர். தொலைக்காட்சிகளில் பார்க்கின்றனர். ஆகவே அவர்கள் முஸ்லிம்களுடைய நடைமுறைகளைப் புரிந்து கொண்டுள்ளனர்.”

“இதுதான் இஸ்லாம், இந்து மதம் இன்னொரு சமயம், பரவாயில்லை. உங்கள் சமயம் உங்களுடைய சமயம். எங்கள் சமயம் எங்களுடைய சமயம். திருக்குர் ஆனில் இது தான் கூறப்பட்டுள்ளது.”

எடுத்துக்காட்டு, முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்ணக் கூடாது. ஆனால் அதற்காக அவர்கள் மற்றவர்கள் அதனை உண்பதை தடுக்கவில்லை என்பதை முஹைடின் குறிப்பிட்டார்.

“ஆகவே அதிகமான பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. மெக்காவில் மாடுகளை வெட்டக் கூடாது என்று இந்துக்கள் கூறுவதை நீங்கள் பார்ப்பதில்லை. புதிய பிரச்னைகளை உருவாக்க வேண்டாம்.”