நிதி ஒதுக்கீடு: ஜெயக்குமார் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார்

தமது நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து பிஎஸ்எம் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான அனுமதி கோரும் மனுவை அவர் இன்று பெடரல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு செய்தார்.

ஜெயக்குமாரின் மனுவை தெதுவான் சீனிவாசன் என்ற அவரது வழக்குரைஞர் நிறுவனம் தாக்கல் செய்தது.

பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் சட்டத்துறை தலைவரின் (ஏஜி) கடமை என்ன என்பது பற்றிய கேள்வியும் அடங்கும்.

“அரசு தரப்பு வழக்குரைஞரின் கடமை பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான், தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்ட அரசாங்கத்தை பாதுகாப்பதல்ல”, என்று அவர் தொடர்பு கொண்டபோது மலேசியகினியிடம் கூறினார்.

அவர் கோரியுள்ள பல்வேறு உத்தரவுகளில் நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமாக, எவ்வித கட்சி வேறுபாடுமின்றி, அரசமைப்புச் சட்டம் பிரிவு 8(1) க்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என்பது ஒன்றாகும்.