நேற்று சிலாங்கூர் மாநில அரசு ரவாங் நகரில் ஒரு திறந்தவெளி தீபாவளி உபசரிப்பை பெரும் அளவிலான ஏற்பாட்டுடன் நடத்தியது.
மூவாயிரத்திற்கும் கூடுதலான மக்கள் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டனர். மலாய் மற்றும் இந்திய மக்களோடு அதிகமான சீனர்களும் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு அங்கு நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.
“எதிர்காலம் உங்கள் கையில்”
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாணிக்கவாசகம், தியன் சுவா, வில்லியம் லியோங் ஆகியோருடன் பல சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கொண்டாட்டதில் பங்கேற்றனர்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாருடன் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிமும் உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இதர தலைவர்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு வான்வேடிக்கை நடந்தது.
இரவு மணி 7.00 க்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு மணி 10.00 க்கு மேல் நீடித்தது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் மக்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“மாற்றம் உங்களைக் கூவி அழைக்கிறது. மாற்றத்தைக் கொணர நாங்கள் தயார். அதற்கு உங்களுடைய முழு ஆதரவும் தேவைப்படுகிறது. நமது எதிர்காலம் உங்கள் கையில்”, என்று சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
மக்களே மதிப்பீடு செய்ய வேண்டும்
28 ஆண்டுகளுக்குப் பிறகு சிலாங்கூர் மாநில அரசு வரலாறு படைத்திருக்கிறது. கடந்த ஆண்டு மாநில அரசு ரிம1.7 பில்லியன் ரொக்கத்தை சேமித்துள்ளது என்று ரவாங் தீபாவளி உபசரிப்பில் இறுதியாக உரையாற்றிய மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சிலாங்கூர் மாநில அரசு மாநில மக்களுக்கு வழங்கிய சேவைகளை அவர் தமது நீண்ட உரையில் பட்டியலிட்டார்.
இன, மத பேதமின்றி மாநில மக்கள் அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட்டதையும் அவர் பட்டியலிட்டார்.
சமயப்பள்ளிகள், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் ரிம2.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாநிலத்தில் 9 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் வகுப்பு நடத்துவதற்காக ரிம500,000 ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இரு வாரங்களுக்கு முன்பு கிள்ளான் லிட்டல் இந்தியாவில் நடந்த தீபாவளி உபசரிப்பின்போது கோயில்களின் பராமரிப்புக்காக ரிம500,000 வழங்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய மந்திரி புசார், காஜாங், பூச்சோங், கோம்பாக் மற்றும் உலுசிலாங்கூர் ஆகிய இடங்களிலுள்ள வழிபாட்டுத்தலங்களுக்கு ரிம500,000 ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
மலேசியாவில் அதிகமான மக்களைக் கொண்ட மாநிலம் சிலாங்கூர் மாநிலம். இங்கு 5.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் மலாய்க்காரர்கள் 49 விழுக்காட்டினர், சீனர்கள் 29 விழுக்காட்டினர், இந்தியர்கள் 16 விழுக்காட்டினர், இதரர் 6 விழுக்காட்டினர். மொத்தத்தில், சிலாங்கூர் மாநில மக்களில் 49 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். மலாய்க்காரர் அல்லாதார் 51 விழுக்காட்டினர் என்றாரவர்.
கடந்த கால பாரிசான் ஆட்சியிலும் தற்போதைய பக்கத்தான் ஆட்சியிலும் மக்களுக்கு வழங்கப்பட உதவிகளையும் அமல்படுத்தப்பட்ட செயல்பாடுகளையும் மக்கள் தாங்களாகவே மதிப்பீடு செய்யுமாறு மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.