“அன்வார் பிரதமரானால் அவர், பாஸ் கட்சியின் கைப்பாவையாக இருப்பார்”

பிகேஆர் மூத்த தலைவர் பக்காத்தான் ராக்யாட்டுக்குள் பாஸ் கட்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் அந்த இஸ்லாமியக் கட்சிக்குக் குறிப்பாக ஹுடுட் சட்ட விஷயத்தில் அடி பணிந்து விடுவார் என மசீச-வின் லாபிஸ் எம்பி சுவா தீ யோங் கூறிக் கொண்டுள்ளார்.

“அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்தால் கூட உண்மையான அதிகாரம் பாஸ் கட்சியிடம்தான் இருக்கும். ஹுடுட் சட்ட அமலாக்கத்தையும் இஸ்லாமிய நாட்டைத் தோற்றுவிக்கும் பாஸ் இலட்சியங்களை அன்வார் தடுக்க முடியாது,” சுவா இன்று விடுத்த அறிக்கை கூறியது.

பிரதமர் பொறுப்புக்கு பக்காத்தான் தேர்வு, அன்வார் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் விடுத்துள்ள அறிக்கைக்கு சுவா பதில் அளித்தார்.

ஹுடுட் சட்டம் பக்காத்தான் வெளியிட்ட புக்கு ஜிங்காவில் இடம் பெறாவிட்டாலும் அதனை அமலாக்குவது குறித்து பாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது நல்ல எடுத்துக்காட்டு என அவர் சொன்னார்.

“பாஸ் உண்மையில் கிளந்தானிலும் பக்காத்தான் ராக்யாட் கட்டுக்குள் உள்ள மற்ற மாநிலங்களிலும் இஸ்லாமியக் கொள்கைகளை அமலாக்கி வருகிறது. புக்கு ஜிங்காவில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுக் கொள்கைகளை அது அலட்சியம் செய்கிறது. பாஸ் கட்சியை அன்வார் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அது காட்டுகிறது.”

சுவா, மசீச இளம் தொழில் நிபுணர்கள் பிரிவின் தலைவரும் ஆவார். யார் பிரதமராக வேண்டும் என்பதில் கூட பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அவர் மேலும் கூறினார்.

“பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கே பொருத்தமான வேட்பாளர் என பாஸ் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.”

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் துணைப் பிரதமராக இருப்பதில் தமக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை என அன்வார் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு லிம் முதலில் முஸ்லிமாக இருக்க வேண்டும் என பாஸ் மாற்றுக் கருத்தை வெளியிட்டது.

அந்தக் காரணங்கள் அடிப்படையில் எதிர்த்தரப்புக் கூட்டணியை நம்பமுடியாது என சுவா குறிப்பிட்டார்.