புதிய விமான நிறுவனம் தொடங்குகிறார் ஏர் ஏசியா பெர்னாண்டஸ்

மலேசியாவின் ஏர் ஏசியா பட்ஜெட் விமான நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், புதிய விமான நிறுவனமொன்றைத் தொடங்கவுள்ளார். இதனைத் தெரிவித்த த சன் செய்தித்தாள், அந்த வட்டார விமான நிறுவனம் விரைவில் தொடக்கம் காண விருக்கும் குவாண்டாஸின் ரெட்குயு நிறுவனத்துக்குப் போட்டியாக விளங்கும் எனக் கூறியுள்ளது.

முழுச் சேவைகளைக் கொண்ட அந்நிறுவனம் கேடர்ஹம் ஜெட் என்றழைக்கப்படலாம் என பெர்னாண்டஸ் கூறியதாக அச்செய்தி கூறுகிறது. அந்நிறுவனம் செயல்பட மலேசிய அரசாங்கம் இன்னும் உரிமம் வழங்கவில்லை என்றாலும் அது பயணச் சேவைகளுக்காக  சில பொம்பார்டியர் சிஆர்ஜெ ரக விமானங்களை வாங்கியிருப்பதாக தெரிகிறது.

கோலாலம்பூருக்கு அருகில் உள்ள சுபாங் விமான நிலையத்திலிருந்து செயல்பட அந்நிறுவனம்  அரசாங்கத்தின் அனுமதியைப் பெற முயலும் என ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி அச்செய்தி அறிக்கை அறிவித்திருந்தது.

“பெங்கோக், ஜாகார்த்தா, சிங்கப்பூர் ஆகியவற்றுக்குப் பயணங்கள் மேற்கொள்ள திட்டம் உண்டு”, எனப் பெயர் குறிப்பிடப்படாத அந்த வட்டாரம் தெரிவித்தது.

– Reuters