பிபிஎஸ்எம்ஐ-யை அடுத்த ஆண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தக் கோரிக்கை

அடுத்த ஆண்டு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்கும் விருப்பத்தேர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருப்பத்தேர்வு முதலாமாண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மலேசியக் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு(பேஜ்)வும் ஜாரிங்கான் மலாயு மலேசியா(ஜேஎம்எம்)வும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் முடிவை வரவேற்ற பேஜ் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம், அது 2017க்கு அப்பாலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என நினைக்கிறார்.

அவ்விரு பாடங்களையும் ஆங்கிலத்தில் பயிலும் விருப்பத்தேர்வு பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நூர் அஸிமா கருதுகிறார்.

அவருடைய கருத்தையே கொண்டிருக்கும் ஜேஎம்எம் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா, ஆங்கிலத்தில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் வழிமுறையை மேம்படுத்திக்கொள்ள கல்வி அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் பேஜ்ஜும் ஜேஎம்எம்மும் உதவ உறுதிகூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

“ஒன்பதாண்டுகளாக இந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு நல்ல வெற்றியையும் தந்துள்ளதால் முதலாமாண்டு மாணவர்களுக்கும் அந்த விருப்பத்தேர்வு வழங்கப்பட வேண்டும் என பேஜ் விரும்புகிறது. நம்மிடம் உள்ள ஒன்றை வலுப்படுத்த வேண்டுமே தவிர,ஒதுக்கித்தள்ளக் கூடாது.

“அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பித்தல் நாட்டின் நிர்மாணிப்புக்கு நன்மையாக அமையும் என்பதால் அதைக் குறிப்பிட்ட காலம்வரைதான் என்று வரம்பு கட்டுதல் கூடாது”, என்று அஸ்வாண்டின்(இடம்) கூறினார்.

நூர் அஸிமா, மாணவர்கள் தேர்வுக்கான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விடையெழுதுவதையே விரும்புகின்றனர் என்றார்.

“அம்மொழியில் புலமைபெற ஆசிரியர்கள் சிரமப்படுகிறார்கள் என்றாலும் மாணவர்கள் தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றின்வழி சுயமாகவே அதைக் கற்றுக்கொள்கிறார்கள்”. 

துணைப் பிரதமர் முகைதின் யாசின், அடுத்த ஆண்டிலிருந்து இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்கும் விருப்பத்தேர்வு வழங்கப்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.