கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதில் பாஸ் பிடிவாதமாக இருந்தாலும் பக்காத்தான் ராக்யாட் பொதுக் கொள்கையிலும் இணக்கத்திலும் சர்ச்சைக்குரிய அந்தச் சட்டங்களுக்கு இடம் இல்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சீன சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளார்.
அவர் நேற்றிரவு சுபாங் ஜெயாவில் 65க்கும் மேற்பட்ட சீனர் சங்கங்கள், அமைப்புக்கள் ஆகியவற்றின் 200 பேராளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அந்த வாக்குறுதியை வழங்கினார். அந்த விவகாரம் மீது சீன சமூகம் கொண்டுள்ள கவலையை அந்த இஸ்லாமியக் கட்சியிடம் தெரிவிப்பதாகவும் அன்வார் கூறினார்.
எந்த ஒரு முடிவும் மூன்று உறுப்புக் கட்சிகளுடைய இணக்கத்தின் அடிப்படையிலும் கூட்டரசு அரசியலமப்புக்கு ஏற்பவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பக்காத்தான் இயங்குவதாகவும் அன்வார் வலியுறுத்தினார்.
“ஹுடுட் சட்டம் மீது என்னுடைய நிலை என்ன மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பும் போது, பிகேஆர் மற்றும் பக்காத்தான் நிலை அரசியலமைப்பை ஆதரிப்பதாகும் என நான் அவர்களிடம் சொல்வேன்.”
“ஆனால் முஸ்லிம் என்னும் முறையில் என்னுடைய தனிப்பட்ட நிலை என்ன என்றும் மக்கள் வினவுகின்றனர்.
“அது மிகவும் சிக்கலான விஷயம். நீங்கள் ‘இல்லை’ எனச் சொன்னால் உங்கள் கதை முடிந்தது. ஆனால் நீங்கள் ‘ஆம்’ எனச் சொன்னால் ‘அன்வார் ஹுடுட் சட்டத்தை ஆதரிக்கிறார்’ என நாளை நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் என்ற முறையில் தாம் ஹுடுட் சட்டத்தை வலியுறுத்தும் திருக்குர் ஆனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வார் சொன்னார். ஆனால் அதன் அமலாக்கமும் அதன் மீதான பக்காத்தான் இணக்கமும் வெவ்வேறான விஷயங்கள் என்றார் அவர்.
ஹுடுட் சட்டம் சீன சமூகத்திற்குக் கவலை அளிக்கும் விஷயம் என்பதை பாஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பங்கேற்பாளர்களில் ஒருவர் கூறியதற்குப் பதில் அளித்த அன்வார், இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் பக்காத்தான் கூட்டத்தில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டிடம் அந்தச் செய்தியைத் தெரிவிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
இஸ்லாம் குறித்த சீனர்களுடைய கவலையைப் போன்று சில இளம் டிஏபி தலைவர்கள் கூறும் கருத்துக்கள் குறித்து மலாய்-முஸ்லிம் சமூகம் கவலைப்படுவதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் சீன வாக்காளர்கள் பக்காத்தானைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மசீச தன்னுடைய அரசியல் உயிர்வாழ்வுக்குப் போராடி வருகிறது.
அதே வேளையில் பாஸ் கட்சி, கிழக்குக் கடலோரமுள்ள பழமைப் போக்குடைய மலாய் வாக்காளர்களுடைய ஆதரவை நிலை நிறுத்துவதற்காக ஹுடுட் சட்டத்தை வலியுறுத்துகிறது.
பொருளாதார ரீதியில் பொருத்தமானது அரசியல் ரீதியில் பொருத்தமற்றது
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மில்லியன் ஊழியர்களைக் கொண்டுள்ள அரசாங்கச் சேவையில் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கும் என்ற அறிக்கையை மலாய் நாளேடுகள் பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளதை அன்வார் சுட்டிக் காட்டினார்.
“பக்காத்தான் அரசாங்க ஊழியர்களை தொந்தரவு செய்யாது என திருத்தம் செய்து அறிக்கை வெளியிடுமாறு நான் நமது தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன். கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ஏற்குமானால் தாங்கள் ஆட்குறைப்புச் செய்யப்பட்டு வேலையில்லாமல் போய் விடும் என அரசு ஊழியர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம்.”
“பொருளாதார ரீதியில் அது பொருத்தமானதாகத் தோன்றினாலும் அரசியல் என்று வரும் போது அது பொருத்தமற்றது,” என அன்வார் குறிப்பிட்டார்.
பிரதமருடைய பதவிக் காலத்தை இரண்டு தவணைகளுக்குள் கட்டுப்படுத்த அந்த முத்தரப்புக் கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். கூட்டரசு நிர்வாகத்தை பக்காத்தான் எடுத்துக் கொள்ளுமானால் பிரதமர் நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிப்பதைத் தடுக்கும் என்றும் அவர் சொன்னார்.
மற்ற நாடுகளை எடுத்துக்காட்டிய அன்வார், அதிக காலத்திற்கு ஒருவர் பிரதமராக பதவி வகிக்கும் போது பல பிரச்னைகள் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு “அந்தப் பிரதமர் சக்கரவர்த்தியைப் போல இயங்குவதற்கு விரும்புவதே காரணம்,” என்றார் அவர்.
ஒரே நபர் பிரதமர் பதவியையும் நிதி அமைச்சர் பதவியையும் வகிக்கும் யோசனையை தாம் எதிர்ப்பதாக முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.
அந்த இரு பொறுப்புக்களையும் ஒரே நபர் வைத்துக் கொள்ளும் பழக்கம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காலத்தில் தொடங்கியது. அந்த நடைமுறை நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வரை தொடருகிறது.
“நான் ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்துள்ளேன். நிதி அமைச்சருக்கு காலை தொடக்கம் இரவு வரை வேளை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் 1998ம் ஆண்டு தொடக்கம் பிரதமர்களே நிதி அமைச்சர் பதவிகளையும் வகித்து வருகின்றனர். அதற்கு அவர்கள் மற்றவர்களை நம்பாததே காரணம்- அதில் மிக அதிகமான திட்டங்கள் சம்பந்தப்பட்டுள்ளதும் காரணமாக இருக்கலாம்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.
சீனர் ஒருவர் பிரதமர் பொறுப்பை ஏற்க முடியுமா எனக் கேட்கப்பட்ட போது அன்வார் அந்தக் கேள்விக்கு மறு கேள்வியைத் தொடுத்தார். “அது அவசியமான கேள்வியா?” என்றார் அவர்.
“நான் அதற்கு ‘ஆம்’ எனப் பதில் சொன்னால் அது நாளைய உத்துசான் மலேசியா தலைப்புச் செய்தியாக இருக்கும். நான் ‘இல்லை’ என்று கூறினால் அது நாளைய சீன நாளேடுகளில் தலைப்புச் செய்தியாகி விடும்.”
“ஆகவே என் பதில் இது தான்: அன்வார் அடுத்த பிரதமராக வேண்டும் என்பதே இப்போதைய பக்காத்தான் இணக்கம்”‘ என அன்வார் புன்னகையுடன் கூறிய போது கூட்டத்தினர் அதனை அங்கீகரிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.