கினிடிவி இயக்குநர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்

 

kinitvdirectorstobechargedமலேசியாகினியின் துணை நிறுவனமான கினிடிவி மற்றும் அதன் இரு இயக்குநர்கள் மீது நாளை கோலாலம்பூர் சிறப்பு சைபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இது கடந்த ஜூலை மாதத்தில் “மற்றொருவரை புண்படுத்தும் குற்றத்தன்மையுடைய” இரு வீடியோக்களை பதிவேற்றம் செய்தது சம்பந்தப்பட்டதாகும்.

இவ்விரு வீடியோக்களும் – ஒன்று மலாய் மொழியிலும் மற்றொன்று ஆங்கில மொழியிலும் – பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவதையும் அதில் அவர் சட்டத்துறை தலைவர் (எஜி) முகமட் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் என்று கோருவதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு எம்சிஎம்சி ஆணையத்தின் அதிகாரிகள் மலேசியாகினியில் திடீர் சோதனை நடத்திய பின்னர் இரு கணினிகளைப் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இப்போது கினிடிவி செண்ட். பெர்ஹாட்டுக்கு எதிராகக் குற்றச்சாட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கினிடிவி மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் ரிம50,000க்கு மேற்போகாத அபராதம் அல்லது ஓராண்டுக்கு மேற்போகாத சிறைவாசம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கினிடிவியின் இயக்குநர்கள் ஸ்டீவென் கான் மற்றும் பிரமேஷ் சந்திரன் ஆகிய இருவரும் கோலாலம்பூர் சிறப்பு சைபர் நீதிமன்றத்தில் நாளை காலை மணி 8.30 இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளனர்.

“நாங்கள் பலதடவைகளில் விசாரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், குற்றம் சாட்டப்படுவது இதுதான் முதல்தடவை”, என்று கூறிய மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான். “நாங்கள் எக்குற்றமும் புரியவில்லை. ஆகவே இக்குற்றச்சாட்டுகளை எதிர்த்து கடுமையாகப் போராடுவோம்”, என்று அவர் சூளுரைத்தார்.