சிலாங்கூர் அரசு நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500

குறைந்தபட்ச சம்பளக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் சிலாங்கூர் அரசு மத்திய அரசை முந்திக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து மாநில அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் குறைந்தபட்ச சம்பளமாக ரிம1,500 பெறுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இதனைத் தெரிவித்தார்.

இக் கொள்கை  நல்ல நிதி நிலைமையில் உள்ள மாநில அரசுநிறுவனங்களில் முதலில் செயல்படுத்தப்படும் பின்னர் மற்ற நிறுவனங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்று காலிட் கூறினார்.

அந்த வகையில் இக்கொள்கையால் முதலில் நன்மை அடையப்போன்றவர்கள் சிலாங்கூர் மேம்பாட்டுக்கழகம்(பிகேஎன்எஸ்), சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம்(பிகேபிஎஸ்), பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட்(பிஎன்எஸ்பி), வோர்ல்ட்வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள்.

நிதிநிலைமை சுமாராக உள்ள நிறுவனங்களுக்கு சம்பள உயர்வைச் சரிக்கட்ட மாநில அரசு ரிம10மில்லியன் கொடுத்துதவும் என காலிட் கூறினார்.

வறுமையைச் சமாளிக்கவும் செலவினங்களை ஈடு செய்யவும் குறைந்தபட்ச சம்பளக் கொள்கை தேவை என்பதைத் தொழிற்சங்கங்களும் பக்காத்தான் ரக்யாட்டும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசைப் பொறுத்தவரை அக்கொள்கையை அமல்படுத்தும் விசயத்தில் இன்னும் வெகு தொலைவிலே உள்ளது.