அடக்கவிலை வீடுகள் கட்டுக:பினாங்கு அரசுக்கு நெருக்குதல்

பினாங்கு அரசு குறைந்த-நடுத்தர-விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்ததாக பெருமையடித்துகொள்வது தவறு என்று கண்டிக்கப்பட்டுள்ளது.அந்த வீடுகளைக் கட்ட 2008-க்கு முன்னதாக உண்மையில் திட்டமிட்டது பாரிசான் நேசனல்தான்.

ஏழைகளுக்கு அடக்க விலையில் வீடுகள் கட்டித்தந்ததில்லை என்று குறைகூறப்பட்டதை பினாங்கு அரசு மறுத்திருப்பது குறித்து கருத்துரைத்த பினாங்கு கெராக்கான் வீடமைப்புப் பிரிவுத் தலைவர் குவா கூய் ஹியோங் இவ்வாறு கூறினார். 

தம் அரசுமீது சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை மறுத்த முதலமைச்சர் லிம் குவான் எங், 2008-இலிருந்து 11,596 குறைந்த-நடுத்தர-விலை(எல்எம்சி) வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“அந்த 11,596 வீடுகளில் 8,175 தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டவை அரசாங்க அமைப்புகள் 3,421 வீடுகளைக் கட்டின”, என்று குவா இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

“அந்த 3,421 வீடுகளும் முந்தைய பாரிசான் நேசனல் அரசால் திட்டமிடப்பட்டவை என்பதை முதலமைச்சர் சொல்லவில்லை”, என்று கெபூன் பூங்கா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான குவா குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பினாங்கில் உள்ள வறிய மக்களுக்கு அடக்கவிலையில் வீடுகள் கட்டித்தரவில்லை என்று குவா சாடினார்.

தம் அரசு மக்கள் நலனில் முழுக்கவனம் செலுத்தி வறுமையை முற்றிலும் துடைத்தொழிக்கும் என்று லிம் சொன்னார். ஆனால், சொன்னபடி செய்யவில்லை.

தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை, பினாங்கு அரசு 2008க்கும் 2010க்கும் இடையில் ஒரு எல்எம்சி வீடுகூட கட்டவில்லை என்று குறிப்பிட்டிருப்பதைத் தொடர்ந்து லிம்மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

பினாங்கில் கட்டப்பட்ட எல்எம்சி வீடுகள் எல்லாமே தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டவை என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அதற்கு எதிர்வினையாற்றிய லிம், பினாங்கு அரசு நேரடியாக வீடுகள் கட்டுவதில்லை என்றும் பிடிசி(பினாங்கு மேம்பாட்டுக்கழகம்) மூலமாகத்தான் அது வீடுகளைக் கட்டுவது வழக்கம் என்றும் கூறினார்.

மத்திய அரசும் சியாரிகாட் பெருமாஹான் நெகாரா(எஸ்பிஎன்பி) மூலமாகத்தான் வீடுகளைக் கட்டி வருகிறது என்றாரவர். 

‘எல்எம்சி-களை அரசு நிலங்களில் கட்டுக’

இதனிடையே குவா, பினாங்கு அரசி எல்எம்சி வீடுகளைத் தலைநிலத்தில் கட்டாமல் தீவில் கட்ட வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

பத்து கவானில் எல்எம்சி வீடுகள் கட்டப்போவதாக லிம் அறிவித்திருக்கிறார். பத்து கவான் தலைநிலத்தில் உள்ளது.

“இதனால் தீவில் எல்எம்சி பற்றாக்குறை தீராது….மாநில அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வீடுகள் கட்டுவது முறையாகாது. அப்படி செய்தால் தீவில் உள்ளவர்கள் அடக்கவிலை வீடுகள் இல்லாமல் அவதிப்படுவார்கள்”, என்றாரவர். 

எல்எம்சி வீடுகள் கட்டித்தர வேண்டிய சமூகப் பொறுப்புடைய மாநில அரசு, அப்பொறுப்பை ஒரு தனியார் மேம்பாட்டு நிறுவனத்திடம் மாற்றிவிட்டிருப்பதையும் குவா குறைகூறினார்.

பாயான் முத்தியாராவில் 102 ஏக்கர் நிலத்தை மேம்படுத்தும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அது, எல்எம்சி வீடுகளின் விலையை உயர்த்திவிடுவதுடன் அடக்கவிலையில் வீடுகள் கட்டித்தரும் மாநில அரசின் கொள்கையையும் தோல்வியுறச் செய்யும்.

“மாநில அரசு, பினாங்கு மேம்பாட்டுக்கழகத்தின் வழியாக அரசு நிலத்தில் அந்த வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.

“மாநில அரசு, அரசுநிலத்தை அல்லது ஊராட்சி மன்ற நிலத்தைத் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்று விரைவான ஆதாயம் காண முயலக்கூடாது”, என்று குவா கூறினார். 

பினாங்கு மக்களுக்கு மாநில அரசு அடக்கவிலை வீடுகள் கட்டித்தரவில்லை என்று கெராக்கான் மட்டும் குறைசொல்லவில்லை.

ஆகஸ்ட் மாதம் டிஏபி-இன் ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய், எல்எம்சி பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாத  நகர், கிராமப்புறத் திட்டமிடல், வீடமைப்பு, கலை முதலியவற்றுக்குப் பொறுப்பான மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் வொங் ஹொன் வாய் பதவிவிலக வேண்டும் என்று கூறி அதற்காக தம் கட்சியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். 

டிஏபிக்குள் நிலவும் இந்த உள்சண்டையே வீட்டுப்பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாதிருக்கும் மாநில அரசின் கையாலாகாத்தனத்தைத் தெளிவாகக் காண்பிக்கிறது என்று குவா குறிப்பிட்டார்.

எல்எம்சி வீட்டுக்கொள்கை மோசமடையுமுன்னர் மாநில அரசு அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என குவா கேட்டுக்கொண்டார்.

எல்எம்சி வீடுகள் கட்டத்தவறும் வீடமைப்பாளர்கள் கட்டத்தவறும் ஒவ்வொரு மலிவுவிலை வீடுகளுக்கும் ரிம40,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.

அதைப் பற்றிக் குறிப்பிட்ட குவா, “அபராதத்தை நிறுத்துங்கள். 30விழுக்காட்டு எல்எம்சி வீடுகள் கட்ட வேண்டும் என்பதைக் கடுமையாக அலலாக்குங்கள்”,என்று வலியுறுத்தினார்.