டிஏபி கூட்டத்துக்கு மகாதிரை அழைக்காதது ‘துரோகமாகும்’- உத்துசான்

utusanதேசிய  நிலை   ஆண்டுக்  கூட்டத்துக்கு  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டை   அழைப்பதில்லை    என்ற    டிஏபியின்  முடிவு    மகாதிருக்கு    இழைக்கப்படும்  “துரோகமாகும்”   என்கிறது    உத்துசான்   மலேசியா.

இன்று  அந்நாளேட்டில்   வெளியான   ஒரு   கட்டுரையில்   ஆவாங்  செலாமாட்-  இது  உத்துசான்    செய்தியாசிரியர்களின்  புனைப்பெயர்  என்று  கருதப்படுகிறது-   மகாதிர்  எந்த   எதிர்பார்ப்புமின்றி  டிஏபிக்கு  நிறையவே  விட்டுக்  கொடுத்திருக்கிறார்   என்று   கூறினார்.

மகாதிரும்    பெர்சத்துவின்   மற்ற   தலைவர்களும்   பெர்சே   5  பேரணியிலும்  பக்கத்தான்   மாநாட்டிலும்   கலந்து  கொண்டதன்வழி  டிஏபியை   ஆதரிக்க    வேண்டும்   என்பதை    மலாய்க்காரர்களிடம்   வலியுறுத்தியுள்ளனர்.

“மகாதிர்   டிஏபி   மீதான   தம்   நிலைப்பாட்டை   100  விழுக்காடு,    மலாய்க்காரர்கள்  அவரை  வெறுத்து   ஒதுக்கும்  அளவுக்கு   மாற்றிக்  கொண்டிருக்கிறார்.   உண்மையில்,  இந்த  அரசியல்  மேதையின்  பங்களிப்புக்காக  டிஏபி   நன்றி  பாராட்ட   கடமைப்பட்டுள்ளது.
“அவரை  அழைப்பதில்   என்ன   தவறு?   குறைந்தபட்சம்    டிஏபியின்  பங்காளிக்  கட்சி    என்ற  முறையிலாவது   அழைத்திருக்கலாம்.  டிஏபிக்கு   அவர்  செல்லாக்  காசாகி  விட்டாரா?   என்ன   இருந்தாலும்,    டிஏபி  ஆலோசகர்    லிம்  கிட்  சியாங்    மகாதிரையும்    பார்டி  பிரிபூமி   பெர்சத்து    மலேசியாவையும்   இப்படி   அவமானப்படுத்தக்  கூடாது”,  என்று  ஆவாங்   எழுதியுள்ளார்.