ரபிசியின் மகன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அன்வார்

ரபிசி ரம்லியின் (PH-பாண்டன்) 12 வயது மகன் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டில் ஒரு “தீய” மற்றும் “தீவிரவாத” கலாச்சாரம் வேரூன்றியுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் மற்றும் காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் ஆகியோருக்கு உத்தரவிட்டதாகவும், இருவரும் விரைவாகவும் வெளிப்படையாகவும் அதை செயல்படுவதாக உறுதியளித்ததாக பிரதமர் கூறினார்.

“இந்த வழக்கில் நாம் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், இந்த தீய கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என்று அவர் மக்களவையில் கூறினார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரபிசியின் மகனை ஒரு ஆசாமி இழுத்துச் சென்று சிரிஞ்சால் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுவன் தனது தாயார் மற்றும் அவர்களது ஓட்டுநருடன் இருந்தபோது, இந்த சம்பவம் மாலின் இறக்கும் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் கருப்பு நிற உடையணிந்து, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு ஆண்கள் ஈடுபட்டிருந்தனர். ரபிசி அவர்கள் தனது மனைவியின் காரைப் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறினார்.

சில விஷயங்களில் வெளிப்படையாகப் பேசியதற்காக இந்தத் தாக்குதல் தனக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சந்தேகம் தெரிவித்தார்.

 

 

-fmt