மலாய் அரசு சாரா அமைப்பு: சட்டவிரோதப் பேரணிகளுக்கு வெள்ளிக்கிழமையைப் பயன்படுத்தக் கூடாது

வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பின்னர் “முறையற்ற” தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது குறித்து பினாங்கைத் தளமாகக் கொண்டுள்ள மலாய் அரசு சாரா அமைப்பு ஒன்று ஆத்திரமடைந்துள்ளது. ஏனெனில் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குப் புனிதமான நாள் ஆகும்.

அத்தகைய பேரணிகளுக்கு “ஏற்பாடு செய்கின்றவர்கள் அல்லது நிதி உதவி செய்கின்றவர்கள்” மீது தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பினாங்கு மலாய் பேரவை கூறியது.  முஸ்லிம் மலாய்க்காரர்களான “ஏற்பாடு செய்கின்றவர்கள் அல்லது நிதி உதவி செய்கின்றவர்கள்” வெள்ளிக்கிழமைகளை தங்களது ஆர்ப்பாட்டங்களுக்குத் தேர்வு செய்வதாகத் தோன்றுகிறது என அது குறிப்பிட்டது.

பெர்க்காசா போன்ற முஸ்லிம் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் வெள்ளிக்கிழமைகளில் அதுவும் பள்ளிவாசல்களில் தொழுகைக்குப் பின்னர் நிகழும் அந்தப் பேரணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்துத் தாம் வியப்படைந்துள்ளதாக அதன் தலைவர் ரஹ்மாட் இஸஹாக் கூறினார்.

“தங்களுடைய சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் தாங்கள் தேர்வு செய்யும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுடைய புனித நாள் என்பது அவர்களுக்குத் தெரியாதா அல்லது வேண்டுமென்றே அந்த தினத்தில் நடத்துகின்றனரா?” என ரஹ்மாட் இன்று நிருபர்கள் சந்திப்பின் போது வினவினார்.

“மாநில அரசாங்கத்தின் மீதான தங்களது அதிருப்தியைத் தெரிவிக்கும் நோக்கம் கொண்ட அந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் தாங்கள், மலாய்க்காரர்களுடைய கௌரவத்தை வீதிக்குக் கொண்டு வந்து விட்டதை அவர்கள் உணர வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் நாகரீகமற்றது. மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் தாழ்வாக எண்ணுகின்றனர்”, என அவர் சொன்னார்.

முறையற்ற ஆர்ப்பாட்டங்கள் மூலம் மலாய்க்காரர்களுடைய பிரச்னைகளை அவர்கள் கொண்டு சென்றால் மாநில அரசாங்கம் அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொருட்படுத்தாது எனவும் ரஹ்மாட் கூறினார்.

“மலாய்க்காரர் என்ற முறையில் அத்தகைய மரியாதையற்ற முறையில் என்னை அணுகினால் நானும் இடம் கொடுக்க மாட்டேன்”, என அவர் மேலும் கூறினார்.

தெரு ஆர்ப்பாட்டங்களை விரும்பாத 640,000 பினாங்கு மலாய்க்காரர்கள் சார்பில் பேசுவதாகக் கூறிக் கொண்ட ரஹ்மாட், கொம்தாரைச் சுற்றிலும் வாரந்தோறும் பல அரசு சாரா அமைப்புக்கள் நடத்தி வருகிற தெரு ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்துரைத்தார்.

முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிரான அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்குப் பின்னர் நடத்தப்படுகின்றன. அதற்கு சுவாரா அனாக்-அனாக் மலேசியா தலைவர் முகமட் கனி அப்துல் ஜிமான் வழக்கமாகத் தலைமை தாங்குகிறார்.