அரசு ஊழியர்கள் ஆட்குறைப்புச் செய்யப்படமாட்டார்கள் என பக்காத்தான் வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அரசாங்க ஊழியர் யாரும் ஆட்குறைப்புச் செய்யப்பட மாட்டார்கள் என எதிர்த்தரப்புக் கூட்டணி இன்று விளக்கமளித்தது. அதற்குப் பதில் அரசு சேவையின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என அது கூறியது.

1.2 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட அரசு சேவை சீரமைப்புச் செய்யப்படும் என்ற அச்சத்தைப் போக்குவதற்கு அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூன்று கட்சிகளும் முயன்றன. அவை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தன.

பக்காத்தான் வழங்கிய மாற்று வரவு செலவுத் திட்டத்தில் அரசு சேவையின் திறன் உயர்த்தப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதாகவும் ஆட்குறைப்புப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்றும் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் கூறினார்.

“அரசாங்கச் சேவையின் ஆற்றல் குறைந்ததற்கு அரசியல் தலையீடும் ஒர் அம்சம் என்பதை பக்காத்தான் புரிந்து கொண்டுள்ளது,” என்றார் அவர்.

“என்றாலும் அரசியலமைப்பின் 132வது பிரிவில் 1.2 அரசு ஊழியர்களுடைய நிலைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதை பக்காத்தான் குறிப்பிட விரும்புகிறது,” என குபாங் கெரியான் எம்பி-யுமான அவர் சொன்னார்.

அரசு சேவையில் உற்பத்தித் திறன் இல்லாத பிரிவுகளைக் கைவிடவும் எண்ணிக்கையைக் குறைக்கவும் வேண்டும் என அண்மையில் டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா விடுத்த அறிக்கையால் எழுந்த கவலையைப் போக்குவதற்கு எதிர்த்தரப்புக் கூட்டணி முயலுகிறது.

மலேசிய அரசாங்கச் சேவை அதிகமாகப் பெருத்து விட்டது என்றும் திறமையற்றது என்றும் நீண்ட காலமாகக் குறை கூறப்பட்டு வருகிறது. புவா தெரிவித்த கருத்துக்கள் எப்படி இருந்தாலும் இப்போது உள்ள ஊழியர்கள் தொடர்ந்து வைத்திருக்கப்படுவர் என எதிர்த்தரப்புக் கூட்டணி உறுதி அளித்தது.

சலாஹுடினுடன் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரும் பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் சுல்கெப்லி அகமட்டும் நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பக்காத்தான் நிலையை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வும் டிஏபி-யின் லியூ சின் தொங்-கும் அங்கீகரித்தனர்.

புவா-வின் கருத்துக்கள் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கச் சேவையை இழிவுபடுத்துகிறது என்றும் இனவாதத் தன்மையைக் கொண்டது என்றும் பக்காத்தான் வரவு செலவுத் திட்டத்திலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றும்  குறை கூறுகின்றவர்களை சலாஹுடின் சாடினார்.

பக்காத்தான் வரவு செலவுத் திட்டத்தை வேறுவிதமாக சொல்வது அவதூறு கூறுவதற்கு சமமாகும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

“என்றாலும் மக்கள் விரும்பும் தரத்திற்கு ஏற்ப அரசாங்க ஊழியர்கள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை பக்காத்தான் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறது,” என்றும் சலாஹுடின் குறிப்பிட்டார்.

அளவை மிக மிகப் பெரிதாக (XXL) மாற்ற விரும்புகிறது

பெமாண்டு என்ற திறன் நிர்வாக, பட்டுவாடாப் பிரிவின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு யோசனை கூறும் பொருட்டு ஆலோசகர்களை வேலைக்கு அமர்த்த பிஎன் அரசாங்கம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை ஒதுக்குவதாக நுருல் இஸ்ஸா குற்றம் சாட்டினார்.

பக்காத்தான் அரசாங்கத்தை நிர்வாகம் செய்தால் பெரும்பாலும் ஆலோசகர்களை நியமிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தாம் கூறிக் கொண்ட புத்ராஜெயாவின் நடைமுறைச் செலவுகளைக் குறைக்க தாங்கள் முயலப் போவதாக அவர் சொன்னார்.

“உங்களிடம் இருப்பதைக் கொண்டு இயங்காமல் அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் அவர்கள் அதனை மிக மிகப் பெரிதாக (XXL) மாற்ற விரும்புகின்றனர்,” என அந்த லெம்பா பந்தாய் எம்பி கூறினார்.

அரசாங்க உருமாற்றத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தை சிறிதாக்க விரும்பியது பிரதமரே என்பதை சுல்கெப்லி சுட்டிக்காட்டினார்.

பக்காத்தான் தலைவர்களை அவர்கள் சொன்ன கருத்துக்களுக்காக குறை கூறுவதற்கு முன்னர் தாம் சிறியது எனக் கூறியதற்கான அர்த்தத்தை நஜிப் விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.