மலேசியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர். போதுமான விநியோகம் இல்லாததும் இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சி விலை அதிகமாக இருப்பதும் சாதாரண மனிதருக்கு பெரும் சுமையாக இருந்தது. இவ்வாறு சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மய்யம் கூறுகிறது.
அதனால் 2008-ம் ஆண்டு கால் நடை வளர்ப்புக்காக அரசாங்கம் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூடத் திட்டத்தை அறிவித்த போது மாட்டிறைச்சியை உண்ணும் மலேசியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் என அந்த மய்யத்தைச் சேர்ந்த சந்திரா ராஜு கூறுகிறார். அந்த மய்யம் சுயேச்சையான ஆதாய நோக்கமில்லாத அமைப்பாகும்.
உள்நாட்டில் மாட்டிறைச்சியை உற்பத்தி செய்து இறக்குமதியைக் குறைப்பது அந்தத் திட்டத்தின் நோக்கம் என 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையை மேற்கோள் காட்டிய சந்திரா கூறினார்.
நெகிரி செம்பிலான் அரசாங்கத்துக்கும் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியம் அமைச்சுக்கும் இடையிலான அந்தத் திட்டம் 9 வது மலேசியத் திட்டத்தில் அதிக நன்மைகளைக் கொண்டு வரும் திட்டம் என்றும் கூறப்பட்டது.
“2010க்குள் மாட்டிறைச்சி தேவையில் 40 விழுக்காடு தன்னிறைவு பெறுவது” அந்தத் திட்டத்தின் இலட்சியமாகும். 2010ம் ஆண்டு 8,000 கால் நடைகளை உற்பத்தி செய்யும் இலக்கை அது கொண்டிருந்தது.
“ஆகவே கெமாஸில் 5,000 ஏக்கர் நிலத்தில் 74 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தத் திட்டம் தொடங்கியது.”
நிர்வாக முறைகேடுகள், திறமைக் குறைவு, ஆற்றல் இல்லாமை
என்எப்சி-க்கு 2011ம் ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி வரையில் அமலாக்கப் பணிகளுக்காக 182 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்திரா சொன்னார்.
ஆனால் நிர்வாக முறைகேடுகள், திறமைக் குறைவு, ஆற்றல் இல்லாமை காரணமாக புல்லும் புதரும் மண்டிக் கிடந்த மோசமாக பராமரிக்கப்பட்ட அந்தப் பண்ணையில் 3,289 கால்நடைகள் மட்டுமே திரிந்தன.
“என்எப்சி மாட்டிறைச்சி உண்மையில் ‘கெமாஸ் தங்கம்’ என அழைக்கப்பட வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட மாட்டிறைச்சி விலை கிலோ ஒன்றுக்கு 184 ரிங்கிட் எனக் கணக்கிடப்பட வேண்டும். அந்த விலை மாட்டிறைச்சி பிரியர்கள் விரும்பும் வாக்யூ மாட்டிறைச்சிக்கு இணையான விலையைக் கொண்டுள்ளது.”
“வாக்யூ கால் நடைகள் ஒவ்வொன்றும் 30,000 ரிங்கிட் முதல் 60,000 ரிங்கிட் வரையில் விற்கப்படுகின்றன. அதே வேளையில் ‘கெமாஸ் கோல்ட்’ கால்நடை ஒவ்வொன்றின் விலை ஜுலை 31 வாக்கில் 55,000 ரிங்கிட் ஆகும்.
“இங்கு தான் சிக்கலே எழுகிறது. தேசிய விலங்குக் கூடம் அரசாங்கத்தில் உள்ள ஒருவருடன் தொடர்புடையது. மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்திற்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது. தலமைக்கணக்காய்வாளருடைய அறிக்கைக்கு நாம் நன்றி கூற வேண்டும்.”
“அந்த அமைச்சரது கணவர் டாக்டர் முகமட் சாலே இஸ்மாயிலும் அவர்களது பிள்ளைகளும் அதன் நிர்வாகத்தில் அல்லது முறைகேடான நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர்,” என சந்திரா வாதாடுகிறார்.
“மலேசியாவில் கால் நடைகளை இறக்குமதி செய்து, தீவனம் போட்டு, வெட்டி. மாட்டிறைச்சியைப் பதனீடு செய்து, பொட்டலம் கட்டி விற்பனை செய்வது அந்த என்எப்சி திட்டத்தின் நோக்கம் என அதன் இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
மலேசியர்களுக்கு வாக்யூ மாட்டிறைச்சியை பெறத் தகுதி உண்டு
அந்த என்எப்சி திட்டத்துக்கு கொட்டப்பட்ட பணத்தைக் கொண்டு மலேசியர்களுக்கு ஜப்பானிலிருந்து வாக்யூ மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து விநியோகம் செய்திருக்கலாம் என அந்த ஆய்வு மய்யம் கூறுகிறது.
வாக்யூ இறைச்சிக்கு உள்ள தரம் என்எப்சி இறைச்சி இருக்காது என்பது ஒரு புறமிருக்க, அதன் உற்பத்திச் செலவுகள் வாக்யூ இறைச்சியை விட அதிகமாக இருக்கின்றது. உள்நாட்டு மாட்டிறைச்சிக்கு மலேசியர்கள் மிக அதிகமான விலையைக் கொடுக்கின்றனர் என்பதே அதன் பொருள் ஆகும்.
“மோசமான நிலையில் உள்ள ஒன்றைக் காப்பாற்ற நல்ல பணத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் வழி முறை என்பது துரதிர்ஷ்டமான விஷயமாகும். தோல்வி கண்ட அந்த கால்நடை வளர்ப்புத் திட்டத்துக்குப் புத்துயிரூட்ட இன்னும் அதிகமான பணம் செலுத்தப்படும் என நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என சந்திரா குறிப்பிட்டார்.
“தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் நாம் ஏமாற்றப்படுவதாக உணருகிறோம். ஆண்டுதோறும் அரசாங்கத் திட்டங்களில் பணம் விரயம் செய்யப்படுகிறது. திறமையின்மையும் வெளிச்சத்துக்கு வருகிறது. கவனக்குறைவாக பணம் செலவு செய்யப்படும் முறை அதிர்ச்சி அளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
“மாட்டை அடக்குவதற்கு அரசாங்கம் அதன் கொம்புகளைப் பிடிக்குமா ? அந்த முறைகேட்டுக்கும் அப்பட்டமான வெளிப்படையற்ற போக்குக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா ? அல்லது பெமாண்டு இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் வெறும் அலங்காரமாகவே இருக்குமா ? வெளிப்படையான போக்கும் பொறுப்புணர்வும் இருந்தால் மட்டுமே மலேசியா முன்னேற முடியும்.”