“என்எப்சி கடனில் ஓர் ஆடம்பர கொண்டோ வாங்கப்பட்டது”

அரசாங்க நிதியில் செயல்படும் National Feedlot Corporation (என்எப்சி)-னில் நிதி தவறாக பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறைகூறிவரும் பிகேஆர் , என்எப்சி அதன் துணை நிறுவனமொன்றுக்குக் கடனாகக் கொடுத்த பணத்தில் கோலாலம்பூர், பங்சாரில் ரிம9.8மில்லியனுக்கு  ஓர் ஆடம்பர கொண்டோமினியம் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறியது.

கொண்டோ வாங்கப்பட்ட பணம், கூட்டரசு அமைச்சர் ஒருவரின் கணவர் மற்றும் பிள்ளைகளால் நடத்தப்படும் என்எப்சி, அதன் துணை நிறுவனமான National Livestock and Meats Corporation(என்எல்எம்சி)-னுக்குக் கடனாகக் கொடுத்திருந்த ரிம81மில்லியனில் ஒரு பகுதியாகும் என்று அந்த மாற்றரசுக் கட்சி கூறிக்கொண்டது. 

என்எப்சியால் விற்பனை முகவராக குத்தகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் நிறுவனம்தான் என்எல்எம்சி.இதையும் அமைச்சரின் கணவரும் பிள்ளைகளும்தான் வழிநடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்துக்குத்தான் அக்கடன் கொடுக்கப்பட்டது.

“கால்நடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். கொண்டோவில் என்ன மாடுகளா போய் படுத்துறங்கப் போகுது?”, என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் வினவினார். அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் வியூக இயக்குனர் ரவிசி ரம்லி, பொதுப்பணத்தை வைத்து தேவையற்ற ஒன்றை வாங்குவதும் நம்பிக்கை மோசடிதான் என்றார்.

அரசு நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து மலேசிய ஊழல் தடுப்ப் ஆணைய(எம்ஏசிசி)த்திடம் புகார் செய்யப்பட்டிருப்பதாக சைபுடினும் ரவிசியும் தெரிவித்தனர்.

TAGS: