மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா!

வளரும் நாடுகளின் மத்தியில் மலேசியா முன் நிலையில் நிற்பதாகவும் மூவின மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வதற்காகவும் 21 இயக்கங்களின் ஆதரவோடு 15 கோட்பாடுகளை அறிமுகம் செய்யும் பொருட்டு மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா முதல் கட்ட நிகழ்ச்சி வரும் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சீன அசம்பளி அரங்கில் நடைபெறும் என்று தமிழ் அறிவாரியத்தின் தலைவர் வழக்கறிஞர் சி. பசுபதி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆரோக்கியமான மலேசியாவை உருவாக்குவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். இன அடிப்படையிலான செயல் திட்டம் இனி எடுபடாது. இன அடிப்படையின்றி அரசியல் உருவாக்க வேண்டும் என்பது பலரின் இலட்சியக்கனவாகும்.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் பொருளாதாரம், கல்வி, பண்பாடு, பெண்ணுரிமை, மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படவிருக்கிறது. பல இன மக்களின் ஆற்றலை இனம் கண்டு இன அடிப்படையிலின்றி சலுகைகள் வழங்கப்படவேண்டும்.

தேசிய பள்ளிகளுக்கு சமநிலையில் தமிழப்பள்ளிகள் நிலை நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோட்பாடுகளை ஒருங்கிணைக்கப்பட்ட 21 இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. அவை முன்னிலைப்படுத்தப்படும் என்று வழக்கறிஞர் பசுபதி பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், சீன இயக்கங்களும் ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்குகின்றனர். தனிப்பட்ட முறையில் சாதிக்க முடியாதவற்றை கூட்டமைப்பு முறையில் தட்டிக் கேட்டு சாதிக்க முடியும் என்றார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழாவில் முக்கியப் பேச்சாளராக வழக்கறிஞர் அம்பிகா, ஹாஜி தஸ்லீன், டாக்டர் தோ கின் புன், ஃபாமிரெஸா, சிக் ஜெனி லாசிம்பெர்க் உரையாற்றுவர். இந்நிகழ்வில் சிறப்பு திரைப்படம் திரையிடப்படவுள்ளதோடு வருகையாளர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது.

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் திரண்டு வரும்படி வழக்கறிஞர் ஆறுமுகம் கோரிக்கையை முன் வைத்தார். தொடர்புக்கு : 03-26926533, 016-2112459

[மக்கள்ஓசை]