“பெயரளவுக்கு” சேர்க்கும் காலம் மலையேறி விட்டது: நோர் முகமட்

பூமி கோட்டாவை நிரப்புவதற்காக பெயரளவுக்கு பூமிபுத்ராக்களைச் சேர்த்துக் கொண்டு தங்கள் நிறுவனங்களில் “குறிப்பிட்ட பதவிகளில் அமர்த்தி உண்மையான பூமிபுத்ரா பங்கேற்பை அனுமதிக்காத” தனியார் நிறுவனங்களை பிரதமர் துறையில் பொருளாதாரத் திட்டப் பிரிவுக்குப் பொறுப்பாக உள்ள அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் சாடியிருக்கிறார்.

“தனியார் துறை ‘பெயரளவுக்கு’ பூமிபுத்ராக்களைச் சேர்க்கும் காலம் மலையேறி விட்டது. பூமிபுத்ராக்களை வேலைக்குச் சேர்ப்பதோடு குறிப்பிடத்தக்க பதவிகளில் அவர்களை அமர்த்துவதற்கும் காலம் கனிந்து விட்டது.”

“பூமிபுத்ராக்களில் பொருத்தமான வேட்பாளர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்னும் வாதம் இனிமேலும் பொருந்தாது. அது 1970ம் ஆண்டுகளில் உண்மையானதாக இருக்கலாம். ஆனால் இப்போது அல்ல,” என அவர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினர் இப்ராஹிம் அலி வாய்மொழியாக எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த போது கூறினார்.

அதே கருத்து ஜிஎல்சி என அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் பொருந்தும் என நோர் முகமட் சொன்னார். கோட்டாவை நிரப்புவதற்காக மட்டும் அவை பூமிபுத்ரா அல்லாதவரைச் சேர்க்கக் கூடாது. பொருத்தமான வேட்பாளர்களையும் தேட வேண்டும் என்றார் அவர்.

தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸில் குறிப்பிட்ட சில “வியூக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள்” கோட்டாவை நிரப்புவதற்காக சில தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் ஏற்கனவே தாங்கள் வகித்த பதவிகளில் தோல்வி கண்டவர்கள் என்றும் அந்த நிறுவனத்துக்குள் எழுந்துள்ள புகார்கள் பற்றி இப்ராஹிம் அலி எழுப்பிய கேள்விக்கு நோர் முகமட் பதில் அளித்தார்.