தனிப்பட்ட சுதந்திரத்துக்கு போராடுவது “நாகரீகமற்றது”, டாக்டர் மகாதீர்

பெரும்பான்மை மக்களுடைய உரிமைகளும் பண்புகளும் சிறுபான்மை பிரிவுகளுடைய கோரிக்கைகளுக்கு மேலாகக் கருதப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார்.

உண்மையில் தனிப்பட்ட  சுதந்திரம் என்ற பெயரில் பெரும்பான்மையோரின் பண்புகளுக்கு சிறுபான்மைப் பிரிவுகள் சவால் விடுப்பது “நாகரீகமற்றது” என்றார் அவர்.

அவர் சே டெட் காபி மேசைப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். சமூகப் பண்புகளுக்கு சவால் விடுக்கும் கோரிக்கைகள் “அளவுக்கு அதிகமானவை” என அவர் சொன்னார்.

“நாம் ஒரு சமூகத்தில் வாழ்வதால் நாம் நமது உணர்வுகளுக்கு அடிமையாகி தனிநபர் சுதந்திரத்துக்கான கோரிக்கைகளை விடுக்கக் கூடாது. ஏனெனில் அது பெரும்பான்மை மக்கள் உட்பட மற்றவர்களுடைய சுதந்திரத்தை மீறக் கூடும்”, என அவர் சொன்னார்.

“உயர்ந்த நாகரீகத்தைக் கொண்ட நியாயப் புத்தியுள்ள எந்த மனிதரும்  மற்றவர்களுடைய சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தக் கோரிக்கையையும் தவிர்ப்பார்”, என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார்.

“இருந்தும் மேற்கத்தியப் பண்புகளுக்கு ஏற்ப தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகள் இன்னும் விடுக்கப்படுகின்றன. முழுமையான சமூகம் ஒன்றின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாததே அதற்குக் காரணம் ஆகும்.”

அவர்கள் பண்பாடும் நாகரீகமும் என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார். தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மேற்கத்தியக் கோட்பாடுகள் “எதுவாக இருந்தாலும்” குழப்பத்துக்கு வித்திடும் என்றும் அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.

“சுதந்திரத்துக்கும் வரம்பு உண்டு. நாகரீகமான ஒர் இனத்துக்கு அந்த வரம்பு தெரியும்.”

அதிகாரத்தை பெற முடியாத காரணத்தினால் “ஏமாற்றமடைந்த” சில தரப்புக்கள் இப்போது தனிநபர் சுதந்திரத்துக்கான போராட்டங்களை நடத்துவதாக மலேசியாவின் நான்காவது பிரதமருமான டாக்டர் மகாதீர் மேலும் கூறினார்.

“ஜனநாயகத்தில் பெரும்பான்மையோரிடம் அதிகாரம் சார்ந்துள்ளது. பெரும்பான்மை மக்கள் அமைக்கும் அரசாங்கம் தங்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாக கருதி சிறுபான்மைப் பிரிவுகள் ஏமாற்றம் அடைகின்றன.”

செக்சுவாலிட்டி மெர்தேகா குறித்த சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் மகாதீருடைய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல தரப்பட்ட பாலியல் நாட்டங்களையும் பால் அம்சங்களையும் கொண்டவர்களுடைய உரிமைகளைக் கொண்டாடும் நோக்கத்தை அந்த விழா கொண்டிருந்தது.

அந்த விழா தடை செய்யப்பட்டதை ஆதரிப்பதாக எண்பது வயதைத் தாண்டியுள்ள அந்த முன்னாள் பிரதமர் கடந்த வாரம் கூறியிருந்தார். வரம்பு மீறிய சுதந்திரம் சாலைகளில் மக்கள் நிர்வாணமாக நடப்பதற்கும் பொது இடங்களில் செக்ஸ் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும் வழி வகுக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.