ரிம500 மில்லியன் இழப்பு: கேள்விக்குப் பதில் வேண்டும், எம்பி இங்கே

கிட்டத்தட்ட ரிம500 மில்லியன் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் குறித்து கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவ்விவகாரத்தை மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரிக்க வேண்டும் டிஎபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம் கோரியுள்ளார்.

அமைச்சு நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இப்பெரும் தொகையைப் பாதுகாத்திருக்க முடியும் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் வழங்கப்பட்ட இரு செயல்திட்டங்களை அவர் குறிப்பிட்டார்: ரிம83 மில்லியன் மதிப்புடைய சரவாக் கிராமப்புற நீர் விநியோக சுத்திகரிப்பு அமைவு மற்றும் ரிம555 மில்லியன் மதிப்புடைய சரவாக் சிறப்பு கிராமப்புற நீர் விநியோக 2011/2012 செயல்திட்டம்.

இவை குறித்து தாம் பல புகார்களைப் பெற்றுள்ளதாக டிஎபி பேராக் மாநில தலைவருமான இங்கே கூறினார்.

“இது குறித்து விவாதிக்கவும் இவ்விவகாரம் குறித்து நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் பதிலுக்காகவும் திங்கட்கிழமை இரவு மணி 10.30 வரையில் நாடாளுமன்றத்தில் நான் காத்திருந்தேன்.

“எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க துணை அமைச்சர் மறுத்து விட்டதால், நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்”, என்று இங்கே கூறினார்.