மலேசியா நொடித்துப் போகாது என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார்.
உதவித் தொகைகள் குறைக்கப்படாவிட்டால் கடன் நெருக்கடியில் மூழ்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற நிலையை மலேசியாவும் அடையக் கூடும் என அவர் கடந்த ஆண்டு எச்சரித்திருந்ததற்கு முரணாக இன்றைய கருத்து அமைந்துள்ளது.
2020க்குள் உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக மாறும் இலட்சியத்தை நோக்கி சரியான பாதையில் மலேசியா சென்று கொண்டிருப்பதாக பெமாண்டு எனப்படும் அரசாங்கத்தின் அடைவு நிலை, பட்டுவாடா பிரிவுக்குத் தலைமை ஏற்றுள்ள அவர் சொன்னார்.
நல்ல பலன்களைத் தந்து வரும் நஜிப் நிர்வாகத்தின் பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் அந்த முயற்சிகளுக்கு ஊக்கமளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக தன்னை மேம்படுத்திக் கொள்வதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. அமலாக்கப்படும் திட்டங்களையும் கொள்கைகளையும் கருத்தில் கொண்டால் நாம் நொடித்துப் போக மாட்டோம் என நான் உறுதியாக நம்புகிறேன்”, என இட்ரிஸ் சொன்னதாக பெர்னாமா தெரிவித்தது.
“பொருளாதார உருமாற்றத் திட்டத்துக்கான மரபணுவை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது” மீது எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவர் பேசினார்.
அரசாங்க உதவித் தொகைகள் குறைக்கப்படுவதை எதிர்கொள்ள மலேசியர்கள் தயாராக இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் இட்ரிஸ் கூறியிருந்தார். அவ்வாறு “உதவித் தொகைகளை சீர் செய்யாவிட்டால்” 2019ம் ஆண்டு நாடு நொடித்துப் போகும் நிலையை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“நாம் இன்னொரு கிரீஸ்-ஆக முடிந்து விடுவோம்,” என அவர் அன்றைய தினம் சொன்னார்.
கூட்டரசு அரசாங்கத்தின் நடைமுறைச் செலவுகளில் கணிசமான பகுதி பெட்ரோல், உணவுப் பொருட்கள், மற்றும் இதர இன்றியமையாப் பொருட்களுக்கான உதவித் தொகைகளுக்காக செலவு செய்யப்படுகின்றது. அந்த உதவித் தொகைகளின் மொத்த மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு ஆகும்.