மசீச: வெளிநாட்டு மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது

பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தான் ஆதரிக்கவில்லை என மசீச இன்று அறிவித்தது. அந்த மலேசியர்கள் “நாட்டு நடப்பை அறிய மாட்டார்கள்”என்பது அதன் வாதம்.

அக்கட்சியின் கருத்தைத் தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி)விடம் எடுத்துரைத்த அதன் மத்திய செயல்குழுத் தலைவர் எய் கிம் ஹோக், வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களுக்கு”ஐயத்துக்கிடமான” தகவல்களே கிடைத்து வருவதால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிப்பது நியாயமல்ல என்றார்.

“வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. அவர்கள் மலேசியாவுடன் தொடர்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாட்டு நடப்பை அறிய மாட்டார்கள்.

“அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களும் சந்தேகத்துக்கு உரியவை….நாட்டில் தங்கியிருப்பவர்கள்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்”, என்றாரவர்.

வெளிநாட்டில் வாழும் மலேசியர்களுக்கு ஒருதலைச்சார்பான செய்திகள்தாம் வாசிக்கக் கிடைக்கின்றது என்று மசீச பிஎஸ்சியிடம் வழங்கிய மகஜரில் குறிப்பிட்டுள்ளது.