“தேர்தல் வெற்றிவரை ஒதுக்கீடுகளைப் பிடித்துவைத்துக்கொள்வதும் ஊழல்தான்”

அரசாங்க ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு மீதியை வேட்பாளர் வெற்றி பெற்றதும் தருவதாகக் கூறுவதையும் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயலாகத்தான் கருதவேண்டும் என்கிறது ஊழல்-தடுப்புக் கண்காணிப்பு அமைப்பான டிரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்).

அவ்வாறு சொல்வதுகூட ஊழலின்பாற்பட்டதுதான் என்று டிஐ-எம் தலைவர் பால் லோ கூறினார். அவர் இன்று தேர்தல் சீரமைப்புமீதான  நாடாளுமன்றத் தேர்வுக்குழுவை(பிஎஸ்சி)ச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

“இப்போது ரிம3,000 கொடுத்துவிட்டு ‘நான் வெற்றிபெற்றால் எஞ்சிய ரிம3,000-த்தையும் தருவேன்’ என்று ஒருவர் கூறினால் அது மேம்பாட்டு நிதி அல்ல. அது ஊழல்”, என்றாரவர்.

முன்னதாக, ஒன்பது பேரடங்கிய பிஎஸ்சி குழுவிடம் தம் கருத்துகளை எடுத்துரைத்த லோ,  வாக்காளர்களுக்கு ரொக்கம் அல்லது காசோலையைக் கொடுத்துவிட்டு “எனக்கு வாக்களியுங்கள்” என்று கூறுவதையும் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயலாகத்தான் வரையறுக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

“ ஒரு (ஊடக) நேர்காணலில் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் (அப்துல் அசீஸ் யூசுப்), பணத்தை வாங்குபவர் வாக்களிக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. அதனால் பணம் கொடுப்பது ஊழல் ஆகாது என்றார்.

“அது தப்பான விளக்கம்.பணத்தைக் காட்டி ஒருவரைக் கவர்ந்திழுக்க முயல்வது முறைகேடான செயலாகும்”, என்று அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி தலைமையில் செயல்படும் பிஎஸ்சியிடம் லோ கூறினார்.

கடந்த மே மாதம் சிபு இடைத்தேர்தலின்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிபுவில் நடைபெற்ற ஒரு ‘செராமா’வில், பிஎன் வேட்பாளர் வெற்றி பெற்றால் ரிம5மில்லியன் காசோலையில் கையொப்பமிடுவதாகக் கூறியதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்டார்.