நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட வாய்ப்பில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று பலமாக ஆருடம் கூறப்பட்டிருந்தாலும், நஜிப் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசரின் அதிகாரப்பூர்வ அலுவல் அட்டவணை உள்பட  பல்வேறு கூறுகள் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்பதைத்தான் காண்பிக்கின்றன.

2011 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு(ஏபெக்), நவம்பர் 7-இலிருந்து 13வரை அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெறுகிறது.மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, நாளை நஜிப்பும் மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டருனும் அதில் உரையாற்ற வேண்டும்.

ஏபெக் முடிந்து இந்தோனேசியாவின் பாலியில் நவம்பர் 14-இலிருந்து 19வரை நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டில் நஜிப் கலந்துகொள்வார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இப்படி அடுத்தடுத்து அவர் கலந்துகொள்ள நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன.இவை, நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற ஆருடத்துக்கு வலுச் சேர்ப்பதாக இல்லை.

மேலும், அம்னோ ஆண்டுக்கூட்டம் நவம்பர் 29 தொடங்கி டிசம்பர் 3வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே பிஎன் உச்சமன்றம் இன்று பிற்பகல் கூடுகிறது.

பேரரசரும் இன்று மலாக்காவுக்கு ஒருநாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

11 நஜிப்பின் அதிஷ்ட எண் என்றும் அதனால் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டு டிசம்பர் 10-இல் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சில நாளேடுகள் ஆருடம் தெரிவித்துள்ளன.

மேலும் நஜிப், நேற்று முன்னாள் பிஎன் எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கபோவதாக அறிவிக்கப்பட்டிருந்ததும் அந்த ஆருடத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.

ஆனால், நேற்றைய சந்திப்பில் நஜிப், தேர்தலை விரைவில் நடத்தப்போவதற்கான அறிகுறி எதையும் காண்பிக்கவில்லை.

பொதுத்தேர்தலில், பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள்தான் வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், பள்ளிக்கூடங்களில் டிசம்பர் நடுப்பகுதிவரை எஸ்பிம், எஸ்டிபிஎம் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

கிழக்குக்கரை மாநிலங்கள் பருவ மழைக்காலமானதால் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவது ஆளும் கட்சிக்குச் சாதகமாக இராது.

மலேசியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜு யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்றிருக்கிறார்கள். யாத்திரிகர்களின் கடைத் தொகுதியினர் டிசம்பர் 11-இல்தான் திரும்பி வருவர். 

எனவே இத்தேதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை வைத்தால் அவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழப்பர்.