செக்ஸ் ஒளிநாடா: “தவறான தகவல்” கொடுத்தது மீது போலீஸ் அன்வாரை விசாரிக்கிறது

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது வழக்குப் போட பிஎன் -னும் அம்னோ-வும் அரசாங்க  எந்திரத்தைப் பயன்படுத்த முயலுகின்றன. அந்த முயற்சி இன்னொரு அரசியல் அடக்குமுறை என பிகேஆர் வருணித்தது.

“மற்றவரைப் புண்படுத்தும் பொருட்டு தவறான தகவலை” வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து பிகேஆர் அவ்வாறு கூறியுள்ளது.

அன்வாருடைய போலீஸ் புகார் ‘டத்தோ டி’ செக்ஸ் ஒளிநாடா ஆகும். இணையத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் அந்த ஒளிநாடா கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் பல ஊடக உறுப்பினர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

“இந்த வாரம் போலீசிடம் தமது வாக்குமூலத்தை அளிக்குமாறு அன்வார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆனால் நாங்கள் அவரிடம் புதன்கிழமை கெப்போங் போலீஸ் நிலையத்தில் அதனைச் செய்யலாம் என கூறியுள்ளோம்,” என சுபாங் எம்பி சிவராசா ராசையா கூறினார். அவர் பிகேஆர் உச்சமன்ற உறுப்பினரும் ஆவார்.

“அந்த ஒளிநாடா குறித்த அன்வாரின் புகாரை ஏற்றுக் கொண்ட அதே நபரான டிஎஸ்பி எஸ் சண்முக மூர்த்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்த்தரப்புத் தலைவருக்கு எதிராக புகார் செய்துள்ளார்.”

அந்தப் பின்னணியில் பார்க்கும் போது அன்வார் மீது இன்னொரு அரசியல் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது என சிவராசா குறிப்பிட்டார்.

செக்ஸ் ஒளிநாடா போலீஸ் புகார் மீது போலீஸ் அன்வாருக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கக் கூடும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கோடி காட்டிய பின்னர் அத்தகைய அடக்குமுறை தொடங்கக் கூடும் என்னும் ஊகம் சில மாதங்களாகவே பரவியிருந்ததாக அவர் சொன்னார்.

சுரேந்திரன்: எங்களுக்கு இடையூறு

பெர்மாத்தாங் எம்பி-க்கு எதிராக புதிய கிரிமினல் புலனாய்வை போலீஸ் தொடங்கியுள்ளது குறித்து பிகேஆர் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக அதன் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.

தேசிய அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான இயக்கத்தைத் தடுக்கவும் வரும் தேர்தலில் பிகேஆர் வெற்றி பெறுவதை தடுக்கவும் அன்வார் மீது வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைப்பதற்கான விரக்தி அடைந்த நிலையில் எடுக்கப்படும் புதிய முயற்சி இதுவாகும்.”

“அந்தப் புதிய அரசியல் அடக்குமுறைக்குப் பின்னணியில் அம்னோவும் பிஎன் -னுக் இருக்கின்றன என நாங்கள் கூறத் தயங்கவில்லை. 1998லும் மீண்டும் 2008லும் இப்போதும் அவை அதனைச் செய்துள்ளன,” என சுரேந்திரன் குறிப்பிட்டார்.

ஆதாரங்களை ஜோடித்ததாக கடந்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு இந்த வழக்கிலும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என அவர் மேலும் சொன்னார்.

ராபிஸி: திசை திருப்பும் முயற்சி

பிஎன்/அம்னோ செய்துள்ள தவறுகள் மீதான கவனத்தைத் திசை திருப்புவது அந்த நடவடிக்கையில் நோக்கம் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி வருணித்தார்.

எதிர்க்கட்சிகள் அண்மைய காலமாக பிஎன்/அம்னோ சம்பந்தப்பட்ட பல ஊழல், அதிகார அத்துமீறல் விஷயங்களை அம்பலப்படுத்தி வருகின்றன.

“தேசிய விலங்குக் கூட திட்ட ஊழல் அம்பலமானது மற்றும் இதர அதிகார அத்துமீறல், ஊழல் போன்ற தவறுகள் மீதான கவனத்தைத் திசை திருப்புவதே புதிய நடவடிக்கையின் நோக்கமாகும்.”

“அடுத்து வரும் வாரங்களில் தேர்தல் நெருங்கும் வேளையில் அன்வாரை மேலும் அவமானப்படுத்துவதற்கு மிகவும் தரக்குறைவான அரசியலில் அம்னோ/பிஎன் ஈடுபடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என சிவராசா சொன்னார்.

அந்த வழக்கிற்கு முதுநிலை புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி தி பூன் ஆங்-கை போலீஸ் நியமித்துள்ளதாகவும் அவர் அடுத்த புதன்கிழமை அன்வார் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலனாய்வில் கூறப்பட்டுள்ளவாறு அன்வாரினால் ‘காயப்படுத்தப்பட்டதாக’ கூறப்படும் அந்த ‘மூன்றாவது நபரின்’ அடையாளம் பற்றி தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் சிவராசா தெரிவித்தார்.

“அடுத்த வாரம் எங்களுக்கு அதிகம் தெரிய வரும் என நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.

அந்த ஆபாச வீடியோவை காட்டிய குற்றச்சாட்டை ஷாஸ்ரில் எஸ்கே அப்துல்லா, ரிஸ்டா தலைவர் அப்துல் ரஹிம் தம்பி சிக், பெர்க்காசா பொருளாளர் ஷுயிப் லாஸிம் ஆகிய மூவரும் ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு அபராதம்  விதிக்கப்பட்டது.