தாய்மொழிப்பள்ளிகள் ஒழிப்பையும் உள்ளடக்கிய ஒரு புதிய சமூக ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்த அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கடுமையான சாடலுக்கு ஆளானார்.
அவரது அம்முன்மொழிதல் த எட்ஜ் பைனேன்சியல் டெய்லியில் அவர் எழுதும் பத்தியில் கடந்த மாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. தேசிய ஒற்றுமை பற்றிய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையிலும் அது எழுப்பப்பட்டது.
குழந்தைகள் இன அடிப்படையிலும் அதன் அடிப்படையிலான பள்ளி முறையினாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தாய்மொழி கல்வியும் அளிக்கும் ஒரே பள்ளி முறை வேண்டும் என்றார் கைரி.
அவருடைய புதிய சமூக ஒப்பந்தத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்குச் சேரவேண்டிய பங்கில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் அடங்கும். அத்திட்டம் உருவாக்கம் பெற அதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றாரவர்.
அவரது உரைக்கு சீனமொழி நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. மசீசவின் இளைஞர் தலைவர் வீ கா சியோங் அம்முன்மொழிதலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.
“பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் தாய்மொழிக் கல்விக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நமது வலிமை தாய்மொழிக் கல்வியைச் சார்ந்திருக்கிறது. அதனை ஒழிப்பது குறித்து என்றுமே சிந்திக்காதீர்.
“தேசிய ஒற்றுமைக்கு ஒரே பள்ளி முறை உத்தரவாதமில்லை. தேசிய ஒற்றுமைக்கு தாய்மொழிப்பள்ளி தடையாக இருப்பதாக நினைத்தவாறு குற்றம் சாட்ட வேண்டாம்”, என்று துணைக் கல்வி அமைச்சருமான வீ தமது டிவிட்டரில் கூறினார்.
பொதுவாக்கெடுப்பு – பெரும்பான்மையினரின் எதேச்சதிகாரம்
முன்மொழியப்படும் புதிய சமூக ஒப்பந்தம் அனைத்து இனங்களின் உரிமைகளை, தாய்மொழிக் கல்விக்கான உரிமை உட்பட, பாதுகாக்கும் பெடரல் அரசமைப்புச் சட்டத்துடன் பொருந்தி இருக்க வேண்டும் என்று பக்கத்தான் தரப்பில் டிஎபியின் சீனமொழிக் கல்வி பிரிவின் தலைவர் சோங் எங் வலியுறுத்தினார்.
அவ்வாறான அடிப்படை உரிமைகள் ஒரு பொதுவாக்கெடுப்பு அல்லது பெரும்பான்மையினரின் எதேச்சதிகாரத்தின் மூலம் மறுக்கப்பட முடியாது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
“சுருக்கமாக, பொது விவகாரங்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கலாம், ஆனால் இனங்களுக்குரிய அடிப்படை உரிமைகளை அவ்வாறு தீர்மானிக்க முடியாது.
“பொதுவாக்கெடுப்பு என்பது நேரடியான ஜனநாயகம். ஆனால் மலேசியா பின்பற்றுவது பிரதிநிதித்துவ ஜனநாயகமாகும். ஆகவே பொதுவாக்கெடுப்பு நடைமுறைப்படுத்துவது குறித்து மிகக் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.”
டிஎபி புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், பொதுவாக்கெடுப்பு பெரும்பான்மையோரின் எதேச்சதிகாரம், மக்களைக் கவரும் அரசியல் சித்தாந்தம், மக்களிடையே பிளவு மற்றும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் திருகுதாளங்கள் ஆகியவற்றுக்கு இட்டுக் செல்லக்கூடும் என்று எச்சரித்தார்.
உண்மையான 1மலேசியா வாடிவிட்டதா?
சீன கல்விமான்களின் அமைப்பான டோங் ஜியாவ் ஸோங், கைரியின் முன்மொழிதல் குறித்து அதன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டது. மலேசியாவின் பல்லின சமுதாயத்திற்கு தற்போதைய பன்மொழி கல்வி முறைதான் மிகச் சிறந்தது என்பதை அது வலியுறுத்தியது.
கல்வி, பண்பாடு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அமலாக்கத்தில் பின்பற்றப்படும் ஒரே ஒரு முழுமையான இறுதிக் கோட்பாடு என்ற கொள்கையும் இதர நியாயமற்ற கொள்கைகளும் பல்வேறு இன மக்களுக்கிடையில் வேற்றுமையை உருவாக்குவதுதான் நமது நாட்டின் மிகப் பெரிய பிரச்னை என்று அந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.
“அனைத்து இனங்களும் சமத்துவ நிலையை அனுபவிக்க அனுமதிப்பதும் அதனை அனைத்து கொள்கைகளுக்கும் கோட்பாடாகக் கொள்வதன் மூலமாக மட்டுமே நாம் நமது அடிப்படைக் காரணங்களை அணுக முடியும்”, என்பது டோங் ஜியாவ் ஸோங்கின் கருத்து என்று அவ்வமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
பொருளாதார கொள்கைகளை, குறிப்பாக பூமிபுத்ராக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை, நன்கு ஆராய்ந்து சரி செய்வதன் வழியும் முழுமையான மற்றும் அர்த்தமுள்ள 1மலேசியா கொள்கையை அமல்படுத்துவதன் வழியும் இனங்களுக்கிடையிலான உறவை சீராக்க முடியும் என்று அந்த அமைப்பு கூறிற்று.