ஆங்கிலத்தில் கற்பிக்கக் கோரி மலாக்காவில் பேரணி

இன்று காலை  மலாக்காவில், அறிவியல்,கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில்  கற்பிக்கும் கொள்கை (பிபிஎஸ்எம்ஐ) தொடர வேண்டும் என்பதை வலியுறுத்த சுமார் ஆயிரம் பெற்றோர் அமைதிப்பேரணி ஒன்றை நடத்தினர்.

பல இனத்தவரும் கலந்துகொண்ட அப்பேரணி புக்கிட் செரிண்டிட்டில் உள்ள துன் ஃபாத்திமா அரங்கில் காலை எட்டு மணிக்குத் தொடங்கியது.

அரசாங்கம் 2016வரை பிபிஎஸ்எம்ஐ தொடரும் என்று அறிவித்துள்ளது. அதன்பின்னர் அப்பாடங்கள் பகாசா மலேசியாவில் கற்பிக்கப்படும். ஆனால், பிபிஎஸ்எம்ஐ அதன்பின்னரும் தொடர வேண்டும் என்பதுதான் பேரணியில் கலந்துகொண்டோரின் விருப்பமாகும் என்று அதன் ஏற்பாட்டாளர் மாக் சீ கின் கூறினார்.

“அப்பாடங்களை பகாசா மலேசியாவில் கற்பிப்பதைச் சில ஆண்டுகள் தாமதப்படுத்தி வைத்திருப்பதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

“நாங்கள் அரசாங்க-எதிர்ப்பாளர்கள் அல்லர். பகாசா மலேசியாவுக்கும் எதிரிகள் அல்லர். எங்கள் பிள்ளைகளுக்கு எது சிறந்ததோ அதைக் கொடுக்க விரும்புகிறோம், அவ்வளவுதான்”, என்று மாக் கூறினார்.

“இத்தனை பேர்  கலந்து கொண்டிருப்பது ஊக்கமளிக்கிறது. கடும் மழையையும் பாராமல் அவர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்”, என்றாரவர். 

பேரணி அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியாக நடந்தது. அதிகாரிகள் அதைத் தடுக்க முனையவில்லை.

“பேரணி அமைதியாக நடப்பதற்கு அனுமதித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்”, என்றார் மாக்.

பிபிஎஸ்எம்ஐ, அரசாங்கத்துக்கு இடையூறு மிக்க ஓர் அரசியல் விவகாரமாக விளங்குகிறது. அரசாங்கமும் குறிப்பாக துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசினும் இப்படியொன்றும் அப்படியொன்றுமாகப் பேசி இவ்விவகாரத்தைச் சொதப்பி விட்டார்கள் என்று குறைகூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் தொடர்ந்து கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறுவோர் பள்ளிகளில் அம்மொழியின் தரம் குறைந்து போயிருப்பதைக் கருத்தில்கொண்டு அவ்வாறு கோரிக்கை விடுக்கின்றனர். அதே நேரத்தில் அக்கொள்கையை எதிர்ப்பவர்களின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. அவர்கள், அதைத் தேசிய மொழிக்கும் அதன்வழியே மலாய்க்காரர் நிலைக்கும் விடுக்கப்படும் சவாலாகக் கருதுகிறார்கள்.