பெட்ரோனாஸ்: எம்ஏசிசி சோதனைகளை நடத்தவில்லை

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெட்ரோனாஸ் என அழைக்கப்படும் பெட்ரோலியம் நேசனல் பெர்ஹாட்டில் சோதனை ஏதும் நடத்தவில்லை. அங்கிருந்து கோப்புக்கள் அல்லது ஆவணங்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை.

இவ்வாறு பெட்ரோனாஸ் நேற்று விடுத்த அறிக்கை கூறியது. புகார்கள் கிடைத்த பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறையின் ஒரு பகுதியாக எம்ஏசிசி அதிகாரிகள் வந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

“எம்ஏசிசி அதிகாரிகள் முதலாவது தகவல் அறிக்கை நடைமுறைக்கு இணங்க அங்கு வந்தனர். தவறு நிகழ்ந்திருப்பதாக புகார் ஏதும் செய்யப்பட்ட பின்னர் எம்ஏசிசி மேற்கொள்ளும் நடைமுறை நடவடிக்கையில் அது ஒரு பகுதி ஆகும்,” என பெட்ரோனாஸ் கூறியது.

மலேசிய கடல் பகுதியில் ஆய்வு, உற்பத்தி நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ள திட்ட ஆலோசகர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் கிடைத்த பின்னர் எம்ஏசிசி பெட்ரோனாஸில் சோதனையை மேற்கொண்டதாக செய்தி இணையத் தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

“டெண்டர்களை வழங்குவதிலும் பரிசீலிப்பதிலும் அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை பெட்ரோனாஸ் கடுமையாகப் பின்பற்றுகிறது. அவற்றில் முழு ஈடுபாடும் கொண்டுள்ளது. ஊழல் நடைமுறைகளை முற்றிலும் சகித்துக் கொள்ளாத நிலையை பெட்ரோனாஸ் கொண்டுள்ளது,” என அந்த அறிக்கை மேலும் கூறியது.

பெர்னாமா