உங்கள் கருத்து: மேயப் போன மாடுகள் திரும்பும் வரை கைரி பேசலாம்

“கைரி முக்கியமான விஷயத்தை மறந்து விட்டதாகத் தெரிகிறது. சும்மா கிடக்கும் நிதியை இன்னொரு இடத்தில் முதலீடு செய்து வருமானம் தேடும் விவகாரம் மட்டுமல்ல அது.”

கைரி: என்எப்சி தாமதத்தினால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஆடம்பர அடுக்குமாடி வீடு வாங்கப்பட்டது

நியாயமான மூளை: என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பெரும் சிக்கலில் மூழ்கியுள்ளதாக தலைமைக் கணக்காய்வாளர் கூறுகிறார். ஆனால் அதனை மறுக்கும் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அது நல்ல வியூக முதலீடு என்கிறார். யார் சொல்வது சரி ?

உபரியாக இருக்கும் நிதிகளை பணச் சந்தையில், நிரந்தர வைப்புத் தொகைகளில், ரொக்கமாக அல்லது கிட்டத்தட்ட ரொக்கச் சொத்துக்களாக வைத்திருக்கப்படுவது பற்றியே நான் கேள்விப்பட்டுள்ளேன். விற்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும் அசையாத சொத்துக்களில் உபரி நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என யாராவது கேள்விப்பட்டிருப்பார்களா ? நான் கேள்விப்படாத முட்டாள்தனமான நடவடிக்கை இதுவாகும்.

அடையாளம் இல்லாதவன்: நல்ல முயற்சி கைரி ஜமாலுதின் அவர்களே விவேகமான முதலீடு ? சொத்துச் சந்தையில் என்எப்சி முதலீடு செய்வதற்காக கடன் பத்திரங்கள், கருவூலப் பத்திரங்கள், ஊழியர் சேம நிதி ஆகியவற்றின் வழி அரசாங்கம் கடன் வாங்க வேண்டியுள்ளது. அதற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து வட்டி செலுத்தப்படுகிறது.

என்எப்சி-க்கு கொடுக்கப்பட்ட கடன் அல்லது மானியத்தின் நோக்கம் அதுவா ? நம்பிக்கை மோசடி பற்றி எதுவும் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா ?

நிறுவனத்தின் நோக்கங்களை விரைவாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். முடியுமானால் அதன் விவரங்களைக் கட்டுப்படுத்துங்கள். இல்லை என்றால் என்எப்சி ஒர் ஆலோங்-காக மாற முடிவு செய்யக் கூடும் அல்லது விரைவாக ஆதாயம் பெறும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்யக் கூடும்.

அஜிஸி: கைரி அவர்களே கதை விடும் போது முட்டாள்தனமாக எதனையும் சொல்லக் கூடாது. நான் இது வரை கேள்விப்படாத முட்டாள்தனமான காரணம் அதுவாகும். அத்தகைய ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

நல்ல வட்டி தரும் வைப்புத் தொகைத் திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது. அந்த விலங்குக் கூடத் திட்டத்தில் அமைச்சருடைய முழுக் குடும்பமும் சம்பந்தப்பட்டுள்ளது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.  அது பற்றி என்ன கதை சொல்லப் போகின்றீர்கள் ? இழப்புக்களைப் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள் ?

நீங்கள் கதை திரித்தாலும் அதனை உருப்படியாகச் செய்யுங்கள். எங்கள் விவேகத்தை அவமானப்படுத்தும் இத்தகைய அரை வேக்காடு முயற்சிகள் வேண்டாம்.

எஸ்கேடி: இத்தகைய முட்டாள்தனமான ‘விளக்கம்’ மூலம் கைரி பிஎன் -னுக்கு சவக்குழியை இன்னும் ஆழமாகத் தோண்டிக் கொண்டிருக்கிறார்.

என்எல்எம்சி என்ற National Meat and Livestocks Corporation-க்குப்  பணம் தேவைப்படாத நிலையில் அரசாங்கம் ஏன் இவ்வளவு பெரிய கடன் தொகை வழங்கப்படுவதற்கு அனுமதித்தது ?

ஜோசபின்: அந்த என்எப்சி குளறுபடி குறித்து கைரி ஏன் அறிக்கை வெளியிடுகிறார் ? அவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஒர் எம்பி-யாக மட்டுமே இருக்கிறார். சரியான பதிலை அவரால் கொடுக்க இயலுமா ?

குழப்பமடைந்தவன்: கைரி முக்கியமான விஷயத்தை மறந்து விட்டதாகத் தெரிகிறது. சும்மா கிடக்கும் நிதியை இன்னொரு இடத்தில் முதலீடு செய்து வருமானம் தேடும் விவகாரம் மட்டுமல்ல அது. நிதிகளைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதே இங்கு எழுந்துள்ள கேள்வி ஆகும்.

மாற்றம்: கைரி கூறும் வாதத்தை பின்பற்றினால் மலேசியா அந்நியச் செலாவணிக்  கையிருப்பையோ தங்கத்தையோ சேமிப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதில் மூலதன வளர்ச்சியும் வருமானமும் கவர்ச்சியாக இருக்கும் பங்சார் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளில் தேசிய சேமிப்புக்களை முதலீடு செய்வது நல்லது.