நஜிப் ஏப்பெக் உச்ச நிலைக் கூட்டத்துக்காக ஹாவாயி சென்று சேர்ந்தார்

ஏப்பெக் என்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஹாவாயி தீவில் உள்ள ஹானாலுலு போய்ச் சேர்ந்திருக்கிறார்.

தனியார் விமானம் ஒன்றில் தமது துணைவியார் ரோஸ்மா மான்சோருடன் சென்றுள்ள பிரதமர் பேர்ள் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஹிக்காம் ஆகாயப் படைத் தளத்தை உள்ளூர் நேரப்படி வெள்ளிக் கிழமை பிற்பகல் மணி 3.45 வாக்கில் சென்றடைந்தார்.

அவரை விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் அனீபா அமானும் அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் ஜமாலுதின் ஜார்ஜிஸும் அவர்களது துணைவியரும் வரவேற்றனர்.

நஜிப், அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா நடத்தும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட முதலாவது பஸிபிக் பெருங்கடல் பங்காளித்துவ கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

ஏப்பெக் உச்ச நிலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது. வட்டார ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை மீது உச்ச நிலைக் கூட்டம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.