கொடூரமான தாக்குதலுக்கு இலக்கானவர்கள் போலீசாருக்கு எதிராக மனு கொடுக்கத் தயாராகின்றனர்

மலாய்க்காரர்களை கொண்ட கும்பல் ஒன்றினால் தாங்கள் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் செய்யச் சென்ற போது கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட நான்கு இந்திய இளைஞர்கள், போலீஸ் தங்களைத் தாக்கியவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனு கொடுக்கத் தயராகி வருகின்றனர்.

போலீஸ் நிலையத்தில் ஏஎஸ்பி ஒருவர், சண்டையைத் தாங்கள் தொடங்கியதை ஒப்புக் கொள்ளுமாறு தங்களை அடித்ததுடன் மிரட்டியதாகவும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

“நாங்கள் அந்த ஏஎஸ்பி-க்கு எதிராக மனுக் கொடுக்கத் தயாராகி வருகிறோம். இது வரையில் 100 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளனர்”, என அந்த நால்வருடைய நண்பரான 34 வயது சி தேவி இன்று ஹிண்ட்ராப்-மனித உரிமைக் கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

தங்களுக்கு ஏற்பட்ட அவலத்தை விவரிப்பதற்காக எம் இந்திரன், எம் ரவிந்திரன், எம் அர்வின் ராஜ், என் சக்திவேல் ஆகிய நால்வரும் அவர்களுக்கு உதவி செய்யச் சென்று கடுமையான காயங்களுக்கு இலக்கான 21 வயது எஸ் சரவணனும் அங்கு இருந்தனர்.

அந்தச் சிறுவர்களைத் தாக்கியவர்களை தாம் எதிர்கொண்ட போது தாக்கப்பட்ட விதத்தை சரவணன் விவரித்ததுடன் தமக்கு ஏற்பட்ட காயங்களையும் காட்டினார். கிட்டத்தட்ட 50 தையல்கள் அவருக்குப் போடப்பட்டுள்ளன.

போலீஸ் என்னிடம் இது வரை வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வரவில்லை என்றும் சரவணன் தெரிவித்தார்.

தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தல்

அந்த நான்கு சிறுவர்களும் வசிக்கும் ஸ்தாபாக் பிபிஆர் குறைந்த விலை அடுக்கு மாடி வீட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை புகார் கூறப்பட்டுள்ள அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 10 மலாய் இளைஞர்களைக் கொண்ட ஒரு கும்பல் தம்மையும் தமக்கு உதவி செய்ய வந்த மூன்று நண்பர்களையும் தாக்கியதாக இந்திரன் கூறிக் கொண்டார்.

தேவியின் ஆண் உறவினர் ஒருவருடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய இந்திரனும் சக்திவேலும் சென்ற போது அந்த இரு சிறுவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அன்று மாலை போலீஸ் அடுக்குமாடிப் பகுதிக்குச் சென்று ரவிந்தரனையும் எம் அர்வின் ராஜையும் கைது செய்தது.

தாங்கள் போலீஸ் காவலில் இருந்த போது குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தும் முயற்சியாக அடிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

“அவர்கள் எங்களை அடித்தனர். சண்டைக்கு நாங்களே காரணம் என்றும் அவர்கள் தொடர்ந்து கூறினர்”, என இந்திரன் சொன்னார்.

அந்த ஏஎஸ்பி தம்மை “தாக்கியதுடன் உதைத்ததாகவும்” சக்திவேல் கூறினார். தாம் குற்றத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த ஏஎஸ்பி தம்மைக் கைது செய்வதற்கு வேறு வழிகளைக் கண்டு பிடிப்பார் என்றும் மிரட்டப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

“14 வயது சிறுவர்களை நீங்கள் எப்படி மருட்ட முடியும்? அது குழந்தைகள் சட்டத்துக்கு முரணானது,” என மனித உரிமைக் கட்சியின் சிஇசி உறுப்பினரான எஸ் தியாகராஜன் நிருபர்களிடம் கூறினார்.

போலீஸிடமிருந்து எங்களை யார் பாதுகாப்பார்கள்?

“அந்த விவகாரம் தொடர்பில் இது வரை 18 போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்கள் ( அதனைச் செய்தவர்கள்) மலாய்க்காரர்கள் என்பதாலா?

“அவர்கள் ஏன் இந்தியர்களிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கின்றனர்? இது முதன் முறை அல்ல. போலீஸ் அடக்குமுறை முடிவுக்கு வராது”, என அவர் கூறினார்.

“போலீஸ் பொது மக்களை மருட்டும் போது நாங்கள் பாதுகாப்புக்கு எங்கே போவது”, என தேவி வினவினார்.