கிட் சியாங்: என்எப்சி கடனை நஜிப் திரும்பப் பெற வேண்டும்

தேசிய விலங்கு வளர்ப்பு நிறுவனம் (என்எப்சி) தவறான நடவடிக்கைகளின் வழி பெரும் ஊழல்களில் உட்பட்டுள்ளதால் அரசாங்கம் அளித்த ரிம181 மில்லியன் கடனை திரும்பப் பெறுவதற்கு நஜிப் ரசாக் தலையிட வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ரிம10 மில்லியன் ‘கால்நடைக்கு கொண்டோமினியம்’ ஊழல் விவகாரத்தில் நஜிப் தலையிட்டு கால்நடை வளர்ப்புக்காக கொடுக்கப்பட்ட அந்த ரிம181 மில்லியன் கொடுக்கப்பட காரணத்திற்கு செலவிடப்படாமல் இருப்பதால் அதனைத் திரும்பப் பெற வேண்டும்”, என்று இன்று விடுத்த ஓர் அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்த அந்தத் திட்டத்தில் ரிம10 மில்லியன் “கால்நடைக்கு கொண்டோமினியம்” ஊழல் மட்டும் கவலைக்குரியதல்ல.

“பொதுநிதி மோசடிக்கு ஆதரவாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமார் விடுத்துள்ள சுயநேர்மை அறிக்கை இன்னும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.”

இந்த மோசடி குறித்து திகைப்பும் அதிர்ச்சியும் தெரிவிப்பதற்கு மாறாக அவர் என்எம்சியை தற்காத்திருப்பது லிம் கிட் சியாங்கை திகிலடையச் செய்துள்ளது.

“தற்போதைய நிருவாகத்தின் கீழ் பெரும் கடன்களிலிருந்து பொதுப்பணத்தை அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது நெருங்கிய நண்பர்களுக்கு அளிக்கும் தவறான செயல்பாடு சர்வசாதாரணமாகி விட்டதா?”, என்று ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினரான அவர் வினவினார்.

யாராவது சிறைக்கு செல்ல வேண்டாமா?

மலேசிய மக்களின் சிந்தனையில் அச்செயல்திட்டம் பற்றி தீவிராமாக சுழல்வது இன்னும் கடுமையானதாகும்.

“யாராவது சிறைக்கு செல்ல வேண்டாமா” என்ற கேள்விக்கு நஜிப்பும், அந்த கடனுக்கு அங்கீகாரம் அளித்தபோது விவசாய அமைச்சராக இருந்த முகதின் யாசினும் பதில் கூற வேண்டும் என்றாரவர்.

இதில் சம்பந்தப்பட்டவர் பக்கத்தான் ரக்யாட் தலைவர்கள் அல்லது அவர்களின் உறவினர்களாக இருந்திருந்தால், மலேசியா ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்எசிசி) இன்னேரம் நடவடிக்கையில் குதித்திருக்கும்.

“ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. செயலின்மை, அக்கறையின்மை,மற்றும் ஆர்வமில்லாமை ஆகியவற்றைதான் அந்த ஆணையத்தில் காணமுடிகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.

இதன் முக்கிய அம்சம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுபவர்கள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜாலிலின் குடும்பத்தினர். என்எப்சி அவர்களுக்குச் சொந்தமானதாகும் என்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

சொகுசு கொண்டோ வாங்குவதற்கு ரிம9.8 மில்லியனும் அமைச்சரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்கு ரிம800,000 னும் நிறுவனத்தின் நிதியிலிருந்து செலவிடப்பட்டிருக்கிறது என்பது வெளியான பின்பும் நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது என்று தமது கவலையை வெளியிட்டார்.

“தமது குடும்பம் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடாது என்ற ஷாரிஸாட்டின் சுயதற்காப்பு விவாதம் இன்னும் பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.”

“அமைச்சரின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில், அவரது குழந்தைதள் வான் ஷாஹிமுர் இஸ்ரான், வான் ஷாஹிமுர் இஸ்மிர் மற்றும் வான் இஸ்ஸானா பாத்திமா ஆகியோர் தங்களுடைய மௌனத்தைக் கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது”. என்று லிம் தெரிவித்தார்.

என்எப்சி பற்றி தேசிய கணக்காய்வர் (ஏஜி) அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வெளியாகியுள்ள பல்வேறு கேள்விகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து அவர்கள் பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

TAGS: