ஒரே மலேசியா பொருட்களுக்கு அதிகமாக விலை வைக்கப்பட்டுள்ளது. தரமும் குறைவாக உள்ளது என எதிர்த்தரப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. என்றாலும் அரசாங்கம் அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போது பெட்ரோல் நிலையங்களில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் பாரம்பரிய மளிகைக் கடை வியாபாரத்துக்கு மேலும் மருட்டல் ஏற்பட்டுள்ளது.
தேசிய எண்ணெய் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸின் உள்நாட்டு சந்தை விற்பனைப் பிரிவான பெட்ரோனாஸ் டாகாங்கான் பெர்ஹாட், பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையங்களில் இயங்கும் ‘கெடாய் மெஸ்ரா’ கடைகளை நடத்துகின்றவர்களுக்கு அந்த யோசனை குறித்து உள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
‘ஒரே மலேசியா சிட்டைகளைக் கொண்ட பொருட்களின் விநியோகத்தை பெட்ரோல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தும் அரசாங்க நோக்கங்களுக்கு ஏற்ப” இன்று காலை நடத்தப்படும் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கெடாய் மெஸ்ரா உரிமையாளர்களை மலேசியாகினிக்கு கிடைத்த அந்தச் சுற்றறிக்கை கேட்டுக் கொள்கிறது.
ஒரே மலேசியாப் பொருட்களை விற்பனை செய்வதற்கு பொறுப்பேற்றுள்ள மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் சுபாங் ஜெயா தலைமையகத்தில் அந்த விளக்கம் கூட்டம் நடைபெறுகிறது. அந்த நிறுவனம் (KR1M) என்ற கெடாய் ராக்யாட் 1 மலேசியாவையும் நடத்தி வருகிறது.
மைடின் தலைமையகத்துடன் இன்று காலை தொடர்பு கொள்ளப்பட்ட போது அது அந்த விளக்கக் கூட்டம் நிகழ்வதை உறுதி செய்தது.
பெட்ரோனாஸ் டாகாங்கின் வர்த்தகப் பங்காளித்துவ நிர்வாகப் பிரிவு முதுநிலை நிர்வாகி பிராடுஸ் ரோஸாலி சுற்றறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.
“விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கெடாய் மெஸ்ரா நடத்துனர்களுக்கு ஊக்கமூட்டப்படுகிறது. ‘கெடாய் மெஸ்ரா’ கடைகளில் அந்தப் பொருட்களை விற்பதற்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மைடினில் பதிவு செய்து கொள்ளுங்கள்” என அந்த சுற்றறிக்கை கூறியது.
அந்த சுற்றறிக்கையுடன் ‘கெடாய் மெஸ்ரா’ கடைகளில் விற்கப்படக் கூடிய 45 வகையான பொருட்களைக் கொண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் அரிசி, சீனி, மிளகாய்ச் சாறு, டின்களில் அடைக்கப்பட்ட சார்டின் மீன்கள், ஆகியவையும் அடங்கும்.
ஒவ்வொரு பொருளின் அடக்க விலையும் விற்பனை விலையும் அதன் சில்லறை விலையும் ஆதாய விகிதமும் குறிக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் பொருட்களுக்கும் பெட்ரோனாஸ் டாகாங்கானுக்கு கொடுக்கப்பட வேண்டிய சில்லறை விலையில் இரண்டு விழுக்காடு உரிமப் பணம் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதைச் சமாளிப்பதற்காக கடந்த ஜுன் மாதம் கெடாய் ராக்யாட் 1 மலேசியா கடைகளை அமைக்கும் யோசனையைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த ஜுன் மாதம் வெளியிட்டார்.
அவர் 25- ஒரே மலேசியாப் பொருட்களையும் அறிமுகம் செய்தார். அவை அதே மாதிரியிலான மற்ற பொருட்களைக் காட்டிலும் 40 விழுக்காடு மலிவானவை என்றும் கூறப்பட்டது.
‘சேமிப்பு விகிதம் பற்றிய கூற்று மிகைப்படுத்தப்பட்டது’
என்றாலும் ‘சேமிப்பு விகிதம் பற்றிய கூற்று மிகைப்படுத்தப்பட்டது’ என பக்காத்தான் ராக்யாட் கூறியது.
ஒரே மலேசியா கடைகளில் சில பொருட்கள் மலிவாக விற்கப்பட்டாலும் அவை கூறப்படுவது போல மலிவு இல்லை என அது தெரிவித்தது.
அந்தக் குற்றச்சாட்டை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மறுத்துள்ளார். ஆப்பிளை ஆப்பிளோடு தான் ஒப்பிட வேண்டும் என அவர் சொன்னார்.
மக்களுக்கு நன்மை தரும் அரசாங்க முயற்சியை சீரழிக்கும் அரசியல் நோக்கத்தை அந்தக் குற்றச்சாட்டுக்கள் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கெடாய் ராக்யாட் 1 மலேசியா கடைகளில் விற்கப்படும் பாலில் இ கோலி கலந்துள்ளதாக அவை குற்றம் சாட்டின.
ஒரே மலேசியா பொருட்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வுக் கூடச் சோதனைகள் அவை தரம் குறைந்தவை என்பதையும் 1983ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் சட்டத்தையும் 1985ம் ஆண்டுக்கான உணவு விதிமுறைகளையும் அவை மீறியுள்ளதையும் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டன.
கெடாய் ராக்யாட் 1 மலேசியா கடைகளை பாரம்பரிய மளிகைக் கடை உரிமையாளர்களும் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே பேரங்காடிகளுடைய வளர்ச்சியால் உயிர்வாழ்வதற்கே போராடி வருகின்றனர்.