பாலிக் பூலா, பிஜேஎஸ்,செலாயாங்கில் மும்முனைப் போட்டியா?

பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்), எதிர்வரும் பொதுத் தேர்தலில் இப்போது பிகேஆர் வசமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

பிஆர்எம், இன்று வெளியிட்ட அறிக்கையொன்று  பினாங்கில் பூலாவ் பினாங்கிலும் சிலாங்கூரில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான், செலாயாங் ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் தலைவர் ரொஹானா அரிப்பின் அறிவித்தார் எனத் தெரிவிக்கிறது.

எனவே பிஆர்எம்-மும் பிகேஆரும் தங்களுக்கிடையில் பேசித் தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் அத்தொகுதிகளில் அவ்விரு கட்சிகள் மற்றும் பிஎன்னையும் உள்ளடக்கி மும்முனை தேர்தல் நடைபெறும். 

இப்போதைக்கு பிஆர்எம்-முக்கும்  பிகேஆர்-உக்குமிடையில் தேர்தல் உடன்பாடு எதுவும் இல்லை என்று தெரிகிறது. புதன்கிழமை பிகேஆரின் அரசியல் பிரிவு கூட்டம் நடைபெறும். அதனை அடுத்து, அது அறிக்கை வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிஆர்எம், பிகேஆரின் முன்னோடியான பார்டி கெஅடிலான் நேசனலுடன் இணைந்துவிட்டதாக முன்பு பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், பிஆர்எம்மில் உள்ள ஒரு பிரிவினர் கட்சியில் பலர் அந்த இணைப்பை விரும்பவில்லை என்றும் அது இன்றும் ஒரு தனிக்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது என்றும் சங்கப் பதிவகமும் அதைத் தனிக் கட்சியாகத்தான் அங்கீகரித்துள்ளது என்றும் கூறிக்கொள்கின்றனர்.

ஆனால், பிகேஆர் தலைவர்களில் பலர், 1955-இல் விடுதலைப் போராளியும் ஒருகாலத்தில் எம்பியாக இருந்தவருமான அஹ்மட் போஸ்டமாம் அந்த இடச்சாரி கட்சியைத் தோற்றுவித்ததிலிருந்து அதில் இருந்துவருவோரில் பலர் உள்பட, பிஆர்எம் என்ற கட்சி இப்போது இல்லை என்றே கூறுகிறார்கள்.

அதன் தலைவர்களில் சிலர் முன்னாள் தலைவர் அப்துல் கரிம்(வலம்), தலைமைச் செயலாளர் எஸ்.கே, சோங் உள்பட 2004 பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தின்கீழ்தான் போட்டியிட்டனர் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

பிகேஆருடன் ஒன்றிணைந்து அதன் முதலாவது காங்கிரஸ் 2005-இல் நடைபெற்றபோது அவர்களும் அதில் கலந்துகொண்டு செயல்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கண்ணுற்றனர்.

வார இறுதியில் பெட்டாலிங் ஜெயா செலாத்தானில் பிஆர்எம் தலைமையகத்தில் கட்சித் தேர்தல் நடந்தது. அதில் டாக்டர் ரொஹானா தலைவராகவும் சோங் துணைத் தலைவராகவும் ஜி.பழனியாண்டி, கோ சுவி யோங் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அல் ஜஃப்ரி முகம்மட் யூசுப் செயலாளர், முகம்மட் யூசுப் ச்சே யா பொருளாளர். 

அக்கூட்டத்துக்கு பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, கித்தா நிபோங் தெபால் எம்பி டான் டீ பெங், பிகேஆரின் கிளானா ஜெயா எம்பி லோ குவோ பர்ன்,பிகேஅர் முன்னாள் இளைஞர் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் முதலானோரும் சென்றிருந்தனர்.