வாதமிடத் தயரா?: இஸ்மாயில் சப்ரிக்கு டோனி புவா சவால்

டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா, கெடாய் ரக்யாட் 1மலேசியா (கேஆர்1எம்)மீது தம்முடன் வாதமிடத் தயரா என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சபரிக்குச் சவால் விடுத்துள்ளார்.

இஸ்மாயில் சப்ரி தம்முடன் வாதமிட முன்வந்தால் ஒரு தொலைக்காட்சி நிலையம் ஏற்பாடு செய்யும் விவாத மேடையில் கலந்துகொள்ள தாமும் தயார் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பியான புவா கூறினார்.

“அவர் முன்வருவாரா?”, என்று புவா இன்றுகாலை தம் பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் ஜூன் மாதம் தொடக்கிவைக்கப்பட்ட கேஆர்1எம், மலேசியர்களுக்கு, அடிப்படைப் பொருள்கள் அடக்கமான விலையில் கிடைப்பதற்கு எற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால், பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், கேஆர்1எம் தரக்குறைவான பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்பதாகக் குறை கூறியுள்ளனர்.

பதிலுக்கு அரசாங்கம் டோனி புவா தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார் என்று குற்றம் சாட்டியது.

கேஆர்1எம்மில் தொடக்கத்திலிருந்தே பொருள்கள் மற்ற இடங்களைவிட 30திலிருந்து 50விழுக்காடுவரை குறைந்த விலைக்கே விற்கப்பட்டு வருவதாக இஸ்மாயில் சப்ரி கூறினார். 

தொலைக்காட்சி விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய இணையத்தள தொலைக்காட்சியான Malaysian Observer.TV (mobTV) முன்வந்துள்ளது.  நவம்பர் 17 பிற்பகல் மணி 3-க்கு தேசா ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள அதன் ஒளிப்பதிவுக்கூடத்தில் அதை ஏற்பாடு செய்ய அது தயாராகவுள்ளது.

அமைச்சர் சவாலை ஏற்றுக்கொள்வாரா என்பது இச்செய்தியைப் பதிவேற்றம் செய்யும்வரை தெரியவில்லை.