புர்சா மலேசியா பங்குச் சந்தை, ஹார்வஸ்ட் கோர்ட் பங்குகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது

புர்சா மலேசியா பங்குச் சந்தை ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ‘குறிக்கப்பட்ட பங்குகள்’ என பிரகடனம் செய்துள்ளது.

அதன் பரிவர்த்தனையையும் ஒரு நாளைக்கு நிறுத்தி வைத்தது. புர்சா மலேசியா பங்குச் சந்தையில் அதன் பங்குகள் பரிவர்த்தனை மிக அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த முடிவு புர்சா மலேசியா இணையத் தளத்தில் இன்று காலை அறிவிக்கப்பட்டது. நேற்று வெட்டுமரப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட அந்த நிறுவனத்தின் பங்குகள் 2 ரிங்கிட் 14 சென் -ஆக உயர்ந்தது.

கடந்த அக்டோபர் 13ம் தேதி 8 சென் -ஆக இருந்த அந்த பங்கு விலையுடன் ஒப்பிடுகையில் அந்த ஏற்றம் 2,575 விழுக்காடு அதிகரிப்பாகும்.

“குறிக்கப்பட்ட பங்குகள்’ என அறிவிக்கப்பட்டால் அந்தப் பங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே ரொக்கம் செலுத்த வேண்டும். அவற்றை விற்பதற்கு முன்னர் எந்தப் பாக்கியும் இருக்கக் கூடாது. அந்தப் பங்குகள் ஊக வாணிகம் மித மிஞ்சிப் போவதைத் தடுப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.”

ஹார்வஸ்ட் கோர்ட், அக்டோபர் 28ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டாவது புதல்வரான முகமட் நஜிபுடினையும் அவரது வர்த்தகப் பங்காளி ரேமண்ட் சான்-ஐயும் இயக்குநர்களாக நியமித்தது.

அந்த நிறுவனத்தில் நஜிபுடின் நவம்பர் 4ம் தேதி வரையில் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் பங்குகள் (மொத்தப் பங்குகளில் 1.7 விழுக்காடு) வரையில் வாங்கியதாகவும் சான் நிறுவனத்தில் 13.83 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாகவும் தி எட்ஜ் என்னும் நிதி நாளேடு நவம்பர் 8ம் தேதி செய்தி வெளியிட்டது.