பிஎன் எம்பி-க்கள் ஏர் ஏசியாவை சாடினர்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவை பிஎன் உறுப்பினர்கள் அடுத்தடுத்து சாடினர். அது மக்களை ‘ஏமாற்றுவதாக’ கூட அவர்கள் குற்றம் சாட்டினர்.

2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தின் போது பேசிய அந்த பிஎன் உறுப்பினர்கள் கடுமையான கருத்துக்களை வெளியிட்டனர்.

“ஏர் ஏசியா நீண்ட காலமாக மக்களை ஏமாற்றி வருகிறது. இப்போது அது இணைப்பின் மூலம் எம்ஏஎஸ் நிறுவனத்தை ஏய்க்க முயலுகிறது. மக்கள் முட்டாளக்கப்பட்டுள்ளனர்… அவரது பெயர் என்ன… அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா?

“அவர் மக்களுக்கு நன்மை கிடைப்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. அவரது ஒரே நோக்கம் ஆதாயம், ஆதாயம், ஆதாயம்..” என பிஎன் ஸ்ரீ காடிங் உறுப்பினர் முகமட் அஜிஸ் கூறினார். அவரைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனத்துக்கு எதிராகவும் அதன் உரிமையாளருக்கு எதிராகவும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஏர் ஏசியாவின் சேவைகள் கேள்விக்குரியதாக இருக்கும் வேளையில் அது விதி விலக்குப் பெற்றது போல் இயங்குவதாக பிஎன் பாத்தாங் சாடோங் உறுப்பினர் நான்சி சுக்ரி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த போது முகமட் இடைமறித்துப் பேசினார்.

ஏர் ஏசியாவின் சேவைத் தரம் குறித்து குறிப்பாக சபா, சரவாக்கிற்கான அதன் சேவைகள் பற்றி நான்சி கேள்வி எழுப்பினார். போக்குவரத்து என வரும் போது உள்ளூர் மக்கள் தங்களுக்குத் தரப்படும் துண்டுகளைக் கூட பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

பங்குப் பரிமாற்றமும் குறை கூறப்பட்டது

ஏர் ஏசியா-மாஸ் பங்குப் பரிமாற்றத்தைக் கண்டிப்பதில் பிஎன் ஜாசின் உறுப்பினர் முகமட் சையட் யூசோப்பும் சேர்ந்து கொண்டார்.

“அந்த பங்குப் பரிமாற்றம் எம்ஏஎஸ்-ஸுக்கும் ஏர் ஏசியாவுக்கும் இடையிலானது அல்ல. மாறாக எம்ஏஎஸ்-ஸுக்கும் டோனி பெர்னாண்ஸ்- டியூன் ஏர் இயக்குநர் கமாருதின் மெரானுன் ஆகியோருக்கும் இடையில் நிகழ்ந்ததாகும். பெர்னாண்டெஸுக்கும் மெரானுக்கும் எம்ஏஎஸ்-ஸில் 20 விழுக்காடு பங்குகள் கிடைத்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆதாயத்தையும் பணத்தையும் கருதும் வணிகர்களான அவர்கள் அந்தப் பங்குகளை விற்க மாட்டார்கள் என்பதற்கு என்ன  உத்தரவாதம்?”

பிஎன் கினாபாத்தாங்கான் உறுப்பினர் பாங் மொக்தார் எராடின் ஏர் ஏசியாவுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்தார். அவர் நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

“அவர் (பெர்னாண்டெஸ்) மிகப் பெரியவர். அவர் விரும்புவதை நாமும் அமைச்சும் அவர் மக்களுடைய ரத்தத்தை தொடர்ந்து உறிஞ்சினாலும் கொடுக்கிறோம். அவர் எதனைப் பயன்படுத்துகிறார்?

“பெர்னாண்டெஸுக்குப் பின்னணியில் யார் இருந்தாலும் அமைச்சு மூளையைப் பயன்படுத்த வேண்டும். ஏர் ஏசியாவா, மக்கள் நலனா என வரும் போது நீங்கள் மக்களை முன் வைக்க வேண்டும்.”

பெர்னாண்டெஸை “மக்களிடமிருந்து திருடும் திருடர்” என அழைத்த அவர், அனைத்துலக போக்குவரத்தை எம்ஏஎஸ்ஸும் உள்நாட்டுப் போக்குவரத்தை ஏர் ஏசியாவும் கவனிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் அமலாக்கப்பட்டால் மலேசிய வான் பயணம் அஸ்தமனமாகி விடும் எனச் சொன்னார்.

” நான் விளக்கத்தை பெற விரும்புகிறேன்! மக்கள் ரத்தம் வற்றிப் போகும் அளவுக்கு உறிஞ்சப்படுகிறது, அமைச்சு பதில் அளிக்காவிட்டால், அரசாங்க அதிகாரிகள் பதில் அளிக்காவிட்டால் ஏர் ஏசியாவுடனான அவர்களது உறவுகளில் “நலன்கள்” சம்பந்தப்பட்டுள்ளதாக நான் அஞ்சுகிறேன்.”

ஏர் ஏசியாவை நடத்தும் டியூன் ஏர் நிறுவன உரிமையாளரான பெர்னாண்டெஸ் அந்த “டியூன்”களுக்கு எல்லாம் எஜமானர் அல்லது தாம் விரும்புவதைப் பெறும் வகையில் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் என்றும் பாங் மொக்தார் சொன்னார்.

“பெர்னாண்டெஸ் டியூன் எஜமானர். அவர் அனைவரையும் மாற்றி விடுவார். முட்டாளாக்கி விடுவார். எல்லோரும் அவரால் வசப்படுத்தப்பட்டுள்ளனர்.”

ஏர் ஏசியாவைக் கண்டிப்பதில் எதிர்க்கட்சி எம்பி-க்களும் சேர்ந்து கொள்வர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.