விமான நிலைய வரி மீதான நிருபர்கள் சந்திப்பை ஏர் ஏசியா தலைவர் ரத்து செய்தார்

ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டெஸ், விமான நிலைய வரி தொடர்பில் இன்று பின்னேரத்தில் தாம் நடத்தவிருந்த நிருபர்கள் சந்திப்பை ரத்துச் செய்துள்ளார்.

என்றாலும் பேஸ் புக் என்ற சமூக இணையத்தளத்தின் மூலம் அவர் அந்த விவகாரம் மீதான தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சாதாரண மக்களும் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் விமான நிலைய வரிகள் குறைவாக இருக்க வேண்டும் என அவர் அதில் கூறியுள்ளார்.

“ஏர் ஏசியா அந்த வரி மலிவாக இருப்பதற்குப் போராடுகிறது. மலேசியர்களும் பயணிகளும் விமான நிலைய வரிகளைக் கொடுக்கின்றனர்.”

அந்தப் பணம் ஏர் ஏசியாவுக்குச் செல்லவில்லை. மாறாக மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு (MAHB) போகிறது”, என அவர் இன்று தமது பேஸ் புக் பக்கத்தில் குறிப்ப்ட்டுள்ளார்.

அதிகமான விமான நிறுவனங்களை ஈர்ப்பதின் மூலம் மலேசிய விமான நிலையங்கள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என மலேசிய விமான நிறுவனமும் ஏர் ஏசியாவும் யோசனைகள் கூறியுள்ளன என்றும் பெர்னாண்டெஸ் தெரிவித்தார்.

“அப்போது அவர்கள் கட்டணங்களைக் குறைக்கலாம்,” என்றார் அவர்.

மலேசியா விமான நிலையங்கள் பல வெற்று வாக்குறுதிகளை வழங்கியுள்ளன என்றும் விமான நிறுவனங்கள் மோசமாக இயங்குவதாக அவை குறை கூறப்பட்டுள்ளன என்றும் பெர்னாண்டெஸ் குறிப்பிட்டார்.

“மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தூய்மையானதாக இருக்க வேண்டும் என ஏர் ஏசியா விரும்புகிறது. 2012ம் ஆண்டு ஜுன் மாதம் இயங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கேஎல்ஐஏ2 என்ற புதிய குறைந்த கட்டண விமான முனையம் 2 பில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது,” என்றார் அவர்.

ஆனால் தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட இரண்டு மில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் கூடுதலாக செலவாகும் என இப்போது கூறப்பட்டுள்ளது. அந்த புதிய விமான நிலையம் 30 மில்லியன் பயணிகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும்.

கேஎல்ஐஏ என்ற கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு ஏன் மூன்றாவது விமான ஒடு பாதை தேவை எனவும் பெர்னாண்டெஸ் கேள்வி எழுப்பினார்.

“இப்போது உள்ள இரண்டு ஒடு பாதைகளில் அவர்கள் இரட்டை முறையைப் பயன்படுத்தாதபோது கேஎல்ஐஏ ஏன் மூன்றாவது ஒடு பாதையைக் கட்டுகிறது. 60 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் ஆற்றலைக் கொண்ட லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் கூட இரண்டு ஒடு பாதைகளே உள்ளன.”

“இன்னொரு ஒடுபாதையைக் கட்டுவதைக் காட்டிலும் வான் போக்குவரத்து முறையை நிர்ணயம் செய்வது மலிவானது,” என்றார் அவர்.

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறை கூறியிருப்பது பற்றிக் குறிப்பிட்ட பெர்னாண்டெஸ் அவர்கள் மிகவும் தனிப்பட்ட முறையில் தம்மைத் தாக்கியுள்ளதாகச் சொன்னார்.

“கிராம மக்கள் இதற்கு முன்னர் விமானத்தில் பறந்தது இல்லை. விமானப் பயணத்தை குறைந்த கட்டணத்தில் வைத்திருக்க நாங்கள் கடுமையாக பாடுபட்டுள்ளோம். அதன் காரணமாக 130 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர்”, என அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா