அம்னோ- பிஎன் பணம் அல்லது இலவசங்களைக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் பொதுத் தேர்தலின்போது பக்கத்தான் ஹராபானுக்கு வாக்களியுங்கள்.
இது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று கிளந்தான் பக்கத்தான் ஹராபானைத் தொடக்கி வைத்தபோது வாக்காளர்களுக்கு வழங்கிய ஆலோசனை.
“பலர் பயப்படுகிறார்கள். பயப்படுவது சரி. அம்னோ கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். பக்கத்தான் ஹராபானுக்கு வாக்களியுங்கள்”, என்று மகாதிர் கூறினார்.
லங்காவியில் மக்கள் தம்மை அணுகி எதிரணிக்கு வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்தார்கள் என்றாரவர்.
“ஆனால், இப்போதே ஆதரவைத் தெரிவித்தால் தங்களுக்கு இனாமாகக் கிடைப்பவை கிடைக்காமல் போகும் என்பதை இரகசியமாகக் கூறினார்கள்.
“அவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். போடுவீர்களா என்று கேட்டால் ஆமாம் என்று தலை அசைப்போம். ஆனால், தேர்தலில் பிஎன்னுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றார்கள்”, என மகாதிர் கூறினார்.
பிஎன் கொடுக்கும் Bantuan Rakyat 1Malaysia (பிரிம்) உதவித்தொகையைத் தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதற்காக பிஎன்னுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றவர் சொன்னார்.
“அவர்கள் எதற்காக பணம் கொடுக்க வேண்டும்?
“ஏனென்றால் அவர்கள் தவறு செய்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தவறு செய்யாதவர்கள் வெற்றிபெற பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை”.
யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய வழியே இல்ல என்று கூறிய மகாதிர் மக்களை மிரட்டுவதற்கு முடியும் என்று அவர்கள் சொல்லக்கூடும் என்றார்.
“ஆனால், அது பொய். நான் சொல்வதை நம்பாவிட்டால் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவராக இருந்த அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மானைக் கேளுங்கள்.
“யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அரசாங்கம் கண்டுபிடிக்க முடியாது. முடியும் என்று அது கூறினால் அது பொய்.
“நாம் பிஎன்னை நிராகரித்து பக்கத்தான் ஹராபானுக்கு வாக்களிக்க அஞ்சக் கூடாது”, என்றாரவர்.
இதனை மகாதிமிர் பேசவில்லை. அவரது முந்நாளைய அனுபவங்கள் பேசுகின்றன. எது எப்படியோ. பாரிசானுக்கு வாக்களிக்க வேண்டாம், என அவர் கூறுவதை மட்டும் வேத வாக்காக எடுத்துக் கொள்வோம்.
உங்கள் காலத்தின் அனுபவமோ?
நம் முன்னாள் பிரதமர் சொல்லுவதைப் பார்த்தால், அவர் நம் மக்களையும் பார்த்து இப்படியும் சொல்லுவதுப் போல் தோன்றுகின்றது; ” ம இ க வினர் உங்களுக்கு தேர்தல் நேரத்தில் உங்களின் சுயமரியாதையைக் குறைத்து, உங்களை கேவலமாகயெண்ணி அரிசி, பால், மாவு, முட்டை, சீனிப் போன்றப் பொருட்களைக் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; ஆனால், எங்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்” என்பதுப் போலுள்ளது; ரொமப் நல்ல யோசனையாகவுள்ளதே; சிந்திக்க வேண்டிய விஷயம்!.
பணம் கொடுக்கிறார்களா? தமிழ் நாட்டு அரசியல் இங்கேயும் விளையாடுகிறதா? இந்தியாவில் நடப்பவை உண்மையிலேயே நாற்றம்– கற்பழிப்பு குற்றவாளிக்காக வக்காலத்து வாங்கி பொது உடைமைகளையும் தனியார் உடமைகளையும் ஊடகங்களின் பொருட்களையும் உடைத்து எரித்து நாசம் பண்ணி இவ்வளவு அநியாயம் பண்ணியும் அத்தனை பேர் இறப்புக்கும் உடந்தையாக இருந்த அரசியல் வாதிகளை என்ன என்று சொல்வது? மட்ட ரக ஈன ஜென்மங்கள்.
இந்திய வம்சாவளி மலாய்க்காரரான மகாதீரே, பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என்றால் மக்கள் என்ன பிச்சைக்காரர்களா ?
அம்னோ/பிஎன்னுக்கு வாக்களிக்க ஒரு ஓட்டுக்கு “ஓட்டு நன்கொடை” என நாடாளுமன்றத்திற்கு RM 5000/=, சட்டமன்றத்திற்கு RM 3000/= என்று “ஓட்டு நன்கொடை” வாங்கிகொண்டலாவா யாருக்கு ஒட்டு என்று முடிவு செய்ய போகிறோம்.